கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் அதில் பல இடங்களை தற்போது பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. 

காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்திக்கு சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்ததற்கு நன்றி எனவும் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியை பெற்று தராததற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். 

இதன்காரணமாக தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக தெரிவித்திருக்கிறார். 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியை தக்கவைக்க 6 இடங்கள் தேவை என்கிற நிலையில் பாஜக அதிக இடங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.