ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் அவர்கள் வார்டில் என்ன திட்டங்கள் செய்தார்கள் எவ்வளவு காலத்தில் செய்தார்கள், முன்கூட்டியே முடித்தால் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிப்பது போல ஏதாவது சான்றிதழ் வழங்க வேண்டும். சிங்காரச் சென்னையாக மாற்றுவது தவிர்த்து safe சென்னை ஆக இருக்க வேண்டும்.
சிங்கார சென்னையாக மாற்றுவதை காட்டிலும் Safe சென்னையாக மாற்றுங்கள் என பாஜக வார்டு கவுன்சிலர் உமா ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஊடக விவாதங்களாக இருந்தாலும் சரி, பாஜக மேடையாக இருந்தாலும் சரி எதையும் துணிந்து பேசக்கூடியவர் உமா ஆனந்தன், தீவிர இந்துத்துவா ஆதரவாளரான இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் கோட்சைவுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையானது, தேர்தலின் போது அதை இவருக்கு எதிரான பிரச்சாரமாகவும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் பயன்படுத்தின. ஆனால் அதையும் மீறி அவர் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி கவுன்சிலராக மாமன்றத்திற்கு நுழைந்துள்ளார்.

திமுக கவுன்சிலர்கள் நிறைந்த அவையில் ஒற்றை ஆளாக சர்ச்சைக்குரிய உமா ஆனந்தன் செல்வது பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டார். அப்போது பட்ஜெட் மீது அவர் உரையாற்றிய சம்பவம் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அதாவது நமஸ்காரம் என சொல்லி உமா ஆனந்தன் பேசத் தொடங்கினார், அதற்கு வணக்கம் என திமுக கவுன்சிலர்கள் ஒரு மித்த குரலில் கூறினர். ஆங்கிலம் தமிழும் கலந்துதான் தன்னால் பேச முடியும் என்று உமா ஆனந்தன் கூற, பரவாயில்லை ஆனால் இந்தியில் மட்டும் பேசி விடாதீர்கள் என்று திமுக கவுன்சிலர்கள் கூறினர். அதற்கு அவர் எனக்கும் இந்தி தெரியாது என கூறினார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் கைத் தட்டி வரவேற்று ஆரவாரம் செய்தனர். இது மாமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:- என் முன்னோர்களுக்கு கோடி நமஸ்காரம், தில்லை அம்பலத்தார் கடவுளை வணங்கி தான் ஆரம்பிப்பேன், அந்த கடவுள் தான் வாக்காளர் மனதில் உள்ளே நுழைந்து எனக்கு வாக்களித்துள்ளார்.
மாமன்றம் கூட்டத்தில் அனைவரும் மரியாதையுடன் தான் நடந்து கொண்டார்கள். மத்திய அரசில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு நிர்பயா நிதி உதவி மற்றும் சுவச் பாரத் போன்ற மத்திய அரசு நிதி உதவிகளை 10% கூட பயன்படுத்த வேண்டும். இந்த அனைத்தும் பயன்படுத்த வேண்டும். பல நல்ல திட்டங்கள் தாளில் மட்டுமே உள்ளது அதை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் அவர்கள் வார்டில் என்ன திட்டங்கள் செய்தார்கள் எவ்வளவு காலத்தில் செய்தார்கள், முன்கூட்டியே முடித்தால் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிப்பது போல ஏதாவது சான்றிதழ் வழங்க வேண்டும்.

சிங்காரச் சென்னையாக மாற்றுவது தவிர்த்து safe சென்னை ஆக இருக்க வேண்டும். வார்டு உறுப்பினர் களுக்கு மாத ஊதியம் கண்டிப்பாக வேண்டும். இந்த வார்டு உறுப்பினர் ஊதியத்தை மத்திய மாநில அரசுகள் பிரித்து வழங்க வேண்டும்.அனைத்து கட்சிகளுக்கும் அவர்களுடைய சித்தானந்தம் மிகவும் முக்கியம் ஆனால் இன்று பட்ஜெட் நாள் என்பதால் நான் எதுவும் பிரச்சனை வர வேண்டாம் என்று வந்து விட்டேன். எனக்கு இந்தி தெரியும் ( merea Hindi maalum) ஆனால் வேண்டும் என்றே தான் பிரச்சனை வேண்டாம் என்று எனக்கு இந்தி தெரியாது என்று மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தேன்.
