Since I Took Over As Governor I Have No Political Affiliation Ram Nath Kovind

ஜனாதிபதி பதவி என்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது, ஒரு கட்சிக்கு ஆதரவாக நடக்கமாட்டேன் என்று பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும்ராம் நாத் கோவிந்த் உறுதியளித்தார்.

வேட்புமனுத் தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி சார்பில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம் நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். பிரதமர் மோடி, பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி ஆகியோர் முன்னிலையில் நேற்று ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்தபின் ராம் நாத் கோவிந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

மான்பை காப்பேன்

நான் ஒரு மாநிலத்தின் ஆளுநராக வந்ததில் இருந்து, எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் நடந்து வருகிறேன். ஜனாதிபதி பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று நான் நம்புகிறேன். அந்த மான்பை, மரியாதையை பாதுகாப்பேன்.

ஜனாதிபதி பதவியின் உயர்ந்த மான்பை காக்க, அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்கிறேன்.

உயர்ந்த அமைப்பு

எனக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த மரியாதைக்குரிய நபர்கள் இந்த பதவியின், அலுவலக்கத்தின் பாரம்பரியத்தை கடைபிடித்து இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் தான் நாட்டின் உயர்ந்த அமைப்பாகும். இந்த உச்சபட்ச அமைப்பை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

புதிய இந்தியா

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இளைஞர்களின் தேவையை நிறைவேற்றி வைக்கும், ஆசையை பூர்த்திசெய்யவும், நவீன கல்வியை ஊக்கப்படுத்தவும் நான் கடினமாக உழைப்பேன். 75 ஆண்டு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா எனும் கனவை உருவாக்க பாடுபடுவேன்.

ஆதரவுக்கு நன்றி

முப்படைக்கும் தலைவர்ஜனாதிபதிதான். ஆதலால், நாட்டின் பாதுகாப்புக்கும், எல்லையை பாதுகாப்பதற்கும் அதிகமான பிரதானம் அளிக்கப்படும். இந்தியா மிகப்பெரிய, உயர்ந்த ஜனநாயக நாடு. எனக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.