siddaramaiah denied to open water in cauvery
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது எனதிட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை எனவும், மேட்டூர் அணையில் தற்போது 21.27 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. வரப்போகும் வெயில்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு இது போதுமானதாக இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரியில் இருந்து குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும் என முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகளின் தேவை கருதி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் தரவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வரின் கடிதத்துக்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது. அடுத்த மாதம் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம், எனவும் தெரிவித்தார்.
