துப்பாக்கிச் சூடு வழக்கில் திமுக எம்ஏல்ஏ கைது, ஆபாச படம் எடுத்து இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திமுக இளைஞர் அணி நிர்வாகி கைது, கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசிய கருப்பர் கூட்டம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது உள்ளிட்ட பிரச்சனைகள் ஸ்டாலினுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான கட்சி என்பது போய் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பிரச்சாரம் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனை மையப்படுத்தி மாரிதாஸ் வெளியிடும் வீடியோக்கள் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்று யூட்யூபில் டிரெண்டாகி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் திமுகவிற்கு எதிராக இந்த விஷயத்தை முன் வைத்து தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருப்பர் கூட்டம் என்கிற அமைப்பு வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோ இந்துக்களை கொந்தளிக்க வைத்தது.

இந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் என்று கூறி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பு உண்டு என்று கூறி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவும் வைரலாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் முதலே இந்துக்களுக்கு எதிரானவர்கள் தாங்கள் இல்லை என்று ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அதற்கு எதிராகவே சம்பவங்கள் நிகழ்ந்து வருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஏதோ ஒரு பிரச்சார புகைப்படத்தை இணைத்து திமுகவை அதில் தொடர்புபடுத்துவது தேர்தல் சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இதே போல் தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார் ஸ்டாலின். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டு கையும் களவுமாக சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார். இனி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டு எப்படி அறிக்கை வெளியிடுவது என்கிற தர்மசங்கடமான சூழலில் திமுக உள்ளது. ஏனென்றால் அப்படி கேள்வி கேட்டு அறிக்கை விட்டால் துப்பாக்கி பயன்படுத்துவது திமுக தான், எனவே திமுக தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட காரணம் என்று அதிமுக பதில் அளிக்கலாம். இதனால் திமுக எம்எல்ஏவின் செயல் ஸ்டாலினுக்கு மற்றொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து ஆசைக்கு இணங்க வைத்த கும்பல் விவகாரத்தில் அதிமுகவிற்கு எதிராக போராட்டம் எல்லாம் நடத்தியது திமுக. இந்த நிலையில் தான் செங்கல்பட்டு செய்யூரில் இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக திமுக இளைஞர் அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவரை கட்சியில் இருந்து ஸ்டாலின் நீக்கிவிட்டார். இனி பொள்ளாச்சியை பற்றி பேசினால் அதிமுகவினர் செய்யூர் விவகாரத்தை எழுப்புவர்.

இப்படி எந்த பக்கம் இருந்து எந்த பிரச்சனை வரும் என்று தெரியாமல் அடுத்தடுத்த தலைவலியால் திமுக தலைமை டென்சனில் உள்ளதாக சொல்கிறார்கள். இதில் பிரச்சனை என்ன என்றால் திருப்போரூர் திமுக எம்எல்ஏ கைது, செய்யூர் திமுக நிர்வாகி கைது விவகாரத்தில் திமுக எந்த  அறிக்கையும் வெளியிடாமல் உள்ளது. அட்லீஸ்ட் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏவை சஸ்பெண்ட் செய்திருந்தால் கூட ஸ்டாலின் இமேஜ் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்த விவகாரத்தில் ஸ்டாலின் எதற்கு பயப்படுகிறார் என்று தெரியவில்லை?