பாஜகவின் தோல்வி அலை தொடர்ந்தால், 2019 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு 100 முதல் 110 எம்பிக்கள் வரை மட்டுமே கிடைக்கும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இதுதொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், பாஜகவின் கோட்டைகளான உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. திரிபுராவில் கிடைத்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், இந்த தோல்வி அவர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், இந்த தோல்வி நாடுமுழுவதும் எதிரொலிக்காது என்றூ பாஜகவினர் தெரிவிக்கின்றனர். பிரதமராக மோடி பதவி ஏற்றபின் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 282 எம்.பி.க்களை கொண்டிருந்த நிலையில், தற்போது, 272 ஆகக் குறைந்துவிட்டது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 325 இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டுக்கு பின் தோற்றதே கிடையாது. பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த அந்த மக்களவை தொகுதியில், பாஜக தோற்றது எப்படி?

கடந்த 2014-ம் ஆண்டில் மோடி குறித்த பரப்புரை அலை, மக்களின் கண்களையும், காதுகளையும் கட்டிப்போட்டு பாஜக வெற்றி பெற்றது. பாஜக ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்தது. ஆனால், தற்போது அந்த அலை குறைந்துவிட்டது. மக்கள் ஒவ்வொன்றையும் தெளிவாக உற்றுநோக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். இதே தோல்வி அலை தொடர்ந்தால், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 100 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.