தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான சண்முகம், தயாநிதியிடம் இப்படி நடந்து கொள்ளலாமா..? என்கிற ரீதியில் தலைமை செயலாளர் சண்முகத்தை கண்டித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிறுபான்மை மக்களின் காவலன், ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்குகுரல் என எப்போதும் முழக்கமிட்டு வரும் திமுகவின் தாய்க்கழகத்தை சேர்ந்த திக தலைவர் கி.வீரமணி அவ்வப்போது சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களை பற்றி கவலை கொள்ளாமல் திமுகவுக்கு துதி பாடுவதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர் சண்முகத்திற்கெதிராக அறிக்கை விட்டு, தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்தியுள்ளது இந்த அறிக்கை. 

சண்முகத்துக்கு எதிராக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இப்படி நடந்து கொள்ளலாமா? திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் மக்களவைத் திமுக உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம்  வா என்ற திட்டத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா நோய் நிவாரண உதவியை அரசிடம் கோரி பாதிப்பிற்குள்ளான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் தலைமைச் செயலாளர் சண்முகம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நடந்து கொண்ட விதமும், போக்கும் அவர் வகிக்கும் தலைமைப் பதவிக்கு உரிய பண்பாடு கடமை உணர்வோடும் பொருத்தமாக அமையவில்லை. 

முன்னாள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் இருந்தாலும் கூட மனிதப்பண்பு, அரசு அதிகாரி, மக்களாட்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது இது மிகவும் வன்மையான கண்டனத்திற்கு உரியது. மக்கள் பிரதிநிதிகள் அவர்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிலும் ஒருவரை போய் பார்த்து கடமையாற்ற சென்றபோது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாத மக்கள் பண்பு நிலைக்க விரும்பும் எவரையும் புண்படுத்தும் செயலாகும். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தவர். உயர் பதவியில் உள்ளார் என்பதை நினைக்கும்போது இன உணர்வும் மனிதநேயமுள்ள நமக்கு நமது எழுதுகோல் கடுமையாக எழுத மறுக்கிறது.

அவர் தனது விரும்பத்தகாத இந்த நடவடிக்கை மூலம் ஏன் தேவையற்ற அவமானத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? அதற்கு என்ன பின்னணி என்பது புரியவில்லை. இதனை அறியாத அதிகாரிக்கு வேதனை மிக்க நமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’’என அவர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், சண்முகம் தாழ்த்தப்பட்டவராக இருந்து கொண்டு இப்படி நடந்து கொள்ளலாமா என்கிற ரீதியில் சுட்டிக் காட்டியுள்ளார்.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.