முகநூலில் , வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் முதல்வர் உடல்நிலை பற்றி அவதூறு வதந்தி பரப்பியதாக இதுவரை 7 பேரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கைது நடவடிக்கையை ஆதரித்தும் , அடிப்படை உரிமையை பறிப்பதாக ராமதாஸ் போன்றோரும் , திமுகவினர் மீது குறிவைத்து சட்டம் பாய்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போன்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். முதலில் சாதாரண காய்ச்சல் , நீர்ச்சத்து குறைபாடு என்றாலும் போகப்போக அவரது உடல் நிலை தீவிரம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டது. முதல்வர் உடல் நிலை குறித்து பலரும் பல்வேறு யூகங்களை வதந்திகளை ஆங்காங்கே பரவலாக பேச ஆரம்பித்தனர்.

இதனால் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. முதல்வர் உடல்நிலை பற்றி பரவிய யூகங்களால் மூன்று அதிமுக தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்களும் நடந்தது. முதல்வர் உடல் நிலை தற்போது என்னதான் நிலை. இது பற்றி பேச வேண்டுமானால் மருத்துவமனை அறிக்கைப்படி அவருக்கு நான்கு வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இதனால் அவர் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

முதல்வர் உடல்நிலை அறிய தமிழகம் தொடங்கி தேசிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தினம் தினம் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் ஒருவித நாகரீக சூழ்நிலை நிலவும் சூழ்நிலையில் தான் நெட்டிசன்களின் பதிவுகள் அவரவர்களை முகம் சுழிக்க வைத்தது. இன்னும் சிலர் பதைபதைக்கின்றனர், சிலர் கோபமடைந்தனர்.

முதல்வர் உடல் நிலைப்பற்றி பிரான்ஸ் தமிழச்சி பதிவு போட்டு பின்னர் வாபஸ் வாங்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். இதே போல் லட்சக்கணக்கானோர் தங்களுக்கு வந்த தகவல்கள் எதுவானாலும் அதைப்பற்றி கவலையேப்படாமல் அதைப்பற்றி விசாரிக்காமல் அடுத்தவருக்கு பார்வர்ட் செய்யும் வேலையை கச்சிதமாக செய்தனர்.

இதனால் பதற்றம் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் ஏற்பட்டது. ஆனால் தகவல்களை ஃபேஸ்புக்கில் போட்டவர் சில லைக்குகளையும் ஷேர்களையும் பெற்றார். ஆரம்பத்தில் எச்சரித்த போலீசார் நிலைமை கைமீறி போகவே 7 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் அவர்களுக்கு தங்கள் கருத்தை பதிவு செய்ய உரிமை இல்லையா என்று பல கற்றறிந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னும் சிலர் அரசாங்கம் உண்மையை சொன்னால் ஏன் இப்படிப்பட்ட வதந்திகள் கிளம்ப போகின்றன என்று கேட்கின்றனர். பொதுமக்களுக்கு முதல்வர் உடல் நிலை பற்றி பேச உரிமை இல்லையா என சாமர்த்தியமாக கேட்கின்றனர். அரசாங்கம் நிர்வாகத்தை நடத்தும் போது அதற்கு என்று சில பொறுப்புகள் உள்ளது. 

முதல்வர் உடல்நிலை பற்றி அப்பட்டமாக அப்படியே சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும். இதே போல் முதல்வர் உடல் நிலை பற்றி பொதுமக்களுக்கு பேச உரிமை இல்லையா என வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களையும் , பொதுமக்களையும் ஒரே தட்டில் வைத்து சிலர் பொதுமை படுத்துகின்றனர். 

முதல்வர் உடல் நிலை பற்றி நெகடிவாக , பாசிட்டிவாக பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதை கேள்வி கேட்கவும் முடியாது. ஆனால் நெட்டிசன்கள் செய்வது அதுவல்ல முதலமைச்சர் பற்றிய அவதூறு வதந்திகளை தங்கள் முகநூலில் பதிவு செய்வதும் படத்தை போடுவதும் , வாட்ஸ் அப்பில் மோசமான தகவல்களை பரப்புவதற்கு எந்த உரிமையையும் யாரும் தரவில்லை.

உறுதி செய்யப்படாத தகவலை சமூகத்தில் பதற்றமும் உயிரிழப்பும் ஏற்படும் என்று தெரிந்து பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் நடவடிக்கை பாய்கிறது. அதே நேரம் இது போன்ற வதந்திகளை பரப்புகின்ற ஆசாமிகள் யார் என்று பார்த்தால் படித்தவர்கள், பண்பாளர்கள் மற்றவர்களுக்கு வழிகட்டியாக இருக்க வேண்டியவர்கள்.

ஒருவர் எம்.சி.ஏ பட்டதாரி, ஒருவர் சைக்காலஜி படித்த பாதிரியார், ஒருவர் தொழிலதிபர் , இருவர் வங்கி ஊழியர்கள் இவர்கள் சமூகத்தில் சாதாரண இடத்தில் இருப்பவர்கள் அல்ல பின்னர் இவர்கள் நோக்கம் என்ன இவர்கள் ஒருவகையில் பாத்ரூம் சுவற்றில் எழுதும் மனோநிலை கொண்டவர்கள். யாரும் தங்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் தாராளமாக எதாவது செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

முகநூலில் பரபரப்பாக எதையாவது பதிவு செய்து அதற்கு எவ்வளவு லைக் வந்துள்ளது, ஷேர் செய்யப்பட்டுள்ளது என்று அதையே நினைத்து ஏங்குபவர்கள். வாட்ஸ் அப்பிலும் , ஃபேஸ்புக்கிலும் வரும் அனைத்தும் உண்மை என நம்புபவர்கள். மதம் , ஜாதி , தனிநபர் அந்தரங்கம் , பெண்கள் பற்றிய அவதூறு எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள்.

இன்னும் சிலர் கமெண்ட்ஸ் போடுகிறேன் என்ற பெயரில் கண்டப்படி எழுதுவது, தரக்குறைவாக திட்டுவது , மோசமான படங்களை போடுவது என்று உலா வருகின்றனர். காரணம் நாம் எங்கோ இருந்து போலி ஐடியில் எழுதுகிறோம். நம்மை யார் கேட்கப்போகிறார்கள் என்ற கூட்டத்தில் கல்லடிக்கும் மனோபாவத்தில் உலாவும் எண்ணம் கொண்டவர்கள். 

இன்னும் சிலர் அதிக பிரண்ட்ஸ் வேண்டும், லைக் ஷேர் வேண்டும் என்பதற்காக யாராவது பெண்கள் படத்தை போட்டு பெண்கள் போலவே காட்டிக்கொண்டுபதிவு போடுவார்கள். இவர்களை முகநூல் மனநோயாளிகள் என்று அழைக்கலாமா? இப்படிப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா? இவர்கள் தான் அதிகாரிகளாக , படித்தவர்களாக , பண்பாளர்களாக நம்மிடையே இருக்கிறார்கள்.

தனக்கு தெரிந்ததை அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்கிற கவலை எதுவும் இன்றி உடனடியாக அதை போட்டு லைக் வாங்கி விட வேண்டும், இவர்கள் தான் சுதந்திர தினம், ராணுவம் போர் வந்தால் தேச பக்தியில் பொங்கி பின்னர் தண்ணீர் தெளித்த பால் போல் அடங்கி விடுவார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் எடுக்கும் நடவடிக்கையில் அரசியல் செய்யாமல் நியாயமான நடவடிக்கையை ஆதரிப்பதே நலம். 

டெய்ல் பீஸ்: இது போன்ற நெட்டிசன் வேலைகளை முதல்வர் உடல்நிலையை பற்றி தாறுமாறாக பதிவு செய்ததில் முக்கிய கட்சியின் ஐடி விங்குக்கும் , செயல்வீரர்களுக்கும் அதிக பங்கிருப்பதாக கூறப்படுவதால் அவர்கள் கைது நடவடிக்கைகளை பார்த்து தற்போது கையை பிசைந்துகொண்டு நிற்கிறார்களாம். அதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரும் , கண்டனமும் வந்துள்ளது என்று கூறுகிறார்கள். - முத்தலீஃப்