கர்நாடகத்துக்கு தனிக்கொடியை எதிர்க்கமாட்டோம்….பா.ஜனதா அதிரடி அறிவிப்பு

கர்நாடக மாநிலத்துக்கு என தனிக்கொடி உருவாக்கும் விஷயத்தை நாங்கள் எதிர்க்கமாட்டோம் அதே சமயம், முதல்வர் சித்தராமையா எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல், கொடி உருவாக்க தன்னிச்சையாக குழு அமைத்துள்ளார் என்று பா.ஜனதா மாநில தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்துக்கு என தனிக்கொடியை உருவாக்க 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையாக அமைத்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், இதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேசியக்கொடிக்கு மாற்றாக வேறு கொடி இருக்ககூடாது எனத் தெரிவித்தது.

அதே சமயம், மாநிலத்தில் உள்ள பா.ஜனதாகட்சியினர் கொடி உருவாக்கும்விஷயத்ைத எதிர்ப்பார்களா? என்று முதல்வர் சித்தராமையாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பா.ஜனதா மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கர்நாடக மாநிலத்துக்கு என தனிக்கொடி உருவாக்குவதை எங்கள் கட்சி ஒருபோதும் எதிர்க்காது. ஆனால், கொடி உருவாக்கும் விஷயத்தில், முதல்வர் சித்தராமையா எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக குழு அமைத்துள்ளார். எப்போதும் ஒரு நாடு, ஒரே கொடி என்ற நிலைப்பாடும் மாறாது.

மாநிலத்துக்கு என தனிக் கொடி உருவாக்க கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் என்த விதிமுறையும் இல்லை. நமக்கு ஒரு நாடு, ஒரு கொடிதான் என்றார்.

2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கிட்டு முதல்வர் சித்தராமையா இந்த விஷயத்தை அரசியல் செய்கிறார் என்பது நான் கூறத்தேவையில்லை, அனைவருக்கும் தெரியும்’’ என்றார்.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மாநிலத்துக்கு என தனியாக கொடி உருவாக்க கூடாது என்று சட்டவிதி ஏதும் இல்லை. இந்த கொடி என்பது மக்களைத் தான் குறிக்கும், அரசைக் குறிக்காது. நாட்டுக்கு என ஒரே கொடி மட்டுமே இருக்கிறது’’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.