தனி டிவி சேனல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தீவிரப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் முதலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு சேனல் என்பது சென்று தற்போது அரசியல் ரீதியாக பலமாக இருக்கும் நபர்கள் தங்களுக்கு என்று தனியாக டிவி சேனல் ஆரம்பிக்கும் போக்கு ஆரம்பமாகியுள்ளது. சன் டிவி திமுகவின் அதிகாரப்பூர்வ சேனல் போன்று செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயா டிவி உதயமானது. பிறகு கலைஞர் டிவி, கேப்டன் டிவி, மக்கள் டிவி என கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு சேனலை ஆரம்பிக்க ஆரம்பித்தன.

இதற்கிடையே புதிய தலைமுறை என்று நடுநிலையாக சேனல் ஒன்று ஆரம்பம் ஆனாலும் அந்த சேனல் எஸ்.ஆர்.எம் கல்விக்குழும அதிபர் பாரிவேந்தரால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கிடையே பாஜக பின்னணியில் தாமரை டிவி, சீமான் ஆதரவில் தமிழன் டிவி என தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளால் இயங்க ஆரம்பித்தனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலாக செயல்பட்டு வந்த ஜெயா டிவி தினகரன் வசம் சென்ற நிலையில், நியுஸ் ஜே எனும் சேனல் அதிமுகவிற்காக தொடங்கப்பட்டது.

பெயரளவில் அதிமுகவிற்கு என்று அந்த சேனல் கூறப்பட்டாலும் அதனை கட்டுப்படுத்துவது முக்கியமான இரண்டு அமைச்சர்கள் தான். மேலும் நியுஸ் ஜே சேனலில் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாடு தான் இருக்கும். ஓபிஎஸ்சுக்கு பெரிய அளவில் அந்த சேனலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் தான் தனிச் சேனல் ஆரம்பிக்கும் முயற்சியை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தீவிரப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

அதிமுகவை ஓபிஎஸ் 2ஆக உடைத்த போதே, தனியாக செய்தி சேனல் ஆரம்பிக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அப்போது ஏற்பட்ட சில அரசியல் மாற்றங்களால் அவரால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் தற்போது ஊடகங்கள் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் அடையாளமாக மையப்படுத்த தொடங்கியுள்ளதால் தனிச் சேனல் முயற்சியை ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக்கியுள்ளதாக சொல்கிறார்கள். இதற்காக கடந்த ஒரு மாத காலமாக ரவீந்திரநாத் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், சென்னையில் ஊடகம் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களை அவரது உதவியாளர்கள் தொடர்ந்து சந்தித்து பேசி வருவதாகவும் கூறுகிறார்கள்.

தனி சேனல் என்பதை தாண்டி ஒரு சில சேனல்களை ஓபிஎஸ் தரப்பு விலை பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்டு முடங்கியுள்ள ஒரு சேனல், லைசென்ஸ் மட்டும் வைத்துள்ள ஒரு சேனல் தரப்பையும் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக தொடர்பு கொண்டு பேசி வருவதாக பேச்சுகள் அடிபடுகிறது. அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒரு சேனல் தமிழகத்தில் உதயமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.