திமுகவில் சேர்ந்த ஒரே மாதத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் பதவியை தட்டிப்பறித்த செந்தில் பாலாஜியை  திமுக பெரும் தலைகள் மலைபோல் நம்பி வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றபோது ’கரூர் மொத்தமும் திமுகவு மட்டுமே என சத்தியம்’ செய்து நம்பிக்கையை ஊட்டி உள்ளார் செந்தில் பாலாஜி.

 

டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியில் இருந்த செந்தில் பாஜாஜி, டிசம்பர்  14ல் திமுகவில் இணைந்தார். அடுத்து கரூரில்  பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்தி முப்பதாயிரம் பேரை திமுகவில் இணைத்தார். தொடர்ந்து பல்வேறு அதிரடிகளால் ஸ்டாலின் மனதில் பதியம் போட்டார். இதனால் கட்சியில் இணைந்த ஒரே மாதத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவியை தர்ரிச் சென்றார் செந்தில் பாலாஜி. 

இந்நிலையில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பின் செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்துப்பெற்றார். அவருடன் மாநில நெசவாளர் அணி தலைவராக பொறுப்பேற்றுள்ள நன்னியூர் ராஜேந்திரனும் உடன் வாழ்த்துகளை பெற்றார். பிற கட்சித் தலைவர்களை மட்டுமின்றி திமுக சீனியர்களையும் சகட்டுமேனிக்கு கலாய்க்கும் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் செந்தில் பாலாஜியின் தோலில் வாஞ்சையோடு கையைப்போட்டு, ’’கரூரை மட்டுமில்ல.. மேற்கு மாவட்டங்களையும் திமுகவின் கோட்டையாக்க வேண்டிய பொறுப்பு உன்கிட்டதான்யா இருக்கு. தலைவரோட நம்பிக்கையை நிறைவேற்றனும்’ பவ்யமாக  கேட்டுக் கொண்டுள்ளார். உடனே ஸ்டாலினின் கையைப்பிடித்த செந்தில் பாலாஜி, ‘கரூர் மொத்தமும் திமுகவுக்கு தான்’’ என சத்தியம் செய்யாத குறையாக அழுத்தமாக கூறியிருக்கிறார் செந்தில் பாலாஜி.

 

மாவட்டச் செயலாளராக பொறுப்பெடுத்துக் கொண்ட செந்தில் பாலாஜியின் ஆட்டம் இனி கரூரில் ஜரூராக தொடங்கப்போகிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.