திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி கரூரில் நடைபெறும் இணைப்பு விழாவையே மாபெரும் மாநாடு போல பிரம்மாண்டப்படுத்தி 25 ஆயிரம் பேரை இணைக்கப்போவதாக வெளிவரும் தகவலால் அதிமுக வட்டாரம் ஆடிப்போய்க் கிடக்கிறது.     

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்க இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடக்கிறது. இதற்காக அண்ணா அறிவாலயம் போன்ற அமைப்பில் மேடை, விழா நடக்கும் இடத்தில் மட்டுமின்றி கரூர் முழுக்க ஸ்டாலினுக்கு வானுயர்ந்த கட் அவுட்கள், பதாகைகள், தி.மு.க கொடிகள் என ஏற்பாடுகள் பட்டையை கிளப்பி வருகின்றன. விழா நடக்கும் இடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலான சேர்கள் போடப்பட்டுள்ளன. 

விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்றிரவே சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை கரூர் வந்தடைந்தார். கரூர்- கோவை ரோடு அருகே மாவட்ட எல்லையில் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் தொண்டர்களுடன் திரண்டு மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்றனர். 4 மணிக்கு விழா நடக்கும் இடத்திற்கு செல்லும் ஸ்டாலினுக்கு அவர் செல்லும் வழியில் கரூர் 80 அடி ரோடு சந்திப்பில் மேளதாளம் மற்றும் ஒயிலாட்டத்துடன் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த விழாவில் அப்போது செந்தில்பாலாஜி தலைமையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாங்கள் தி.மு.க.வில் இணைந்து அதற்கான உறுதிமொழி படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் அளிக்கின்றனர். 

தொடர்ந்து மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார். கரூரில் நடைபெறுகிற இந்த இணைப்பு விழாவை கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கான எழுச்சி விழாவாக இருக்கும் என அக்கட்சியினர் நம்புகின்றனர். ஸ்டாலின் முன்பு தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக இந்த விழாவுக்காக காசை வாறி இறைத்து வருகிறார் செந்தில் பாலாஜி. 

இந்த விழாவில் செந்தில் பாலாஜிக்கு கட்சிப்பதவியை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விழாவை தொடர்ந்துப் கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் வகையில் அதிரடியாக செந்தில் பாலாஜி களமிறங்க உள்ளதால் அதிமுக வட்டாரம் கலகலத்துக் கிடக்கிறது.