2.0, பேட்ட, விஸ்வாசம் பரபரப்புகளையெல்லாம் அடித்துப் பின்னுக்கு தள்ளிவிட்டு, கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் முதலிடத்திலேயே இருக்கிறது செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார்!’ எனும்  தகவல். செந்தில் பாலாஜியின் மெளனமும், தி.மு.க.வை சேர்ந்த சிலரது ஓப்பன் டாக்குகளும் இந்த தாவலை உறுதிப்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் அ.தி.மு.க.வில் சிறிது காலத்திற்கு முன்பு வரை பெரும் பதவிகளில் பிஸியாய் இருந்துவிட்டு, இப்போது கண்டும் காணாமலும் சற்றே ஒதுங்கியிருக்கும் முக்கியஸ்தர்கள் சிலர் ஸ்டாலினின் கவனத்துக்கு சில தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அதில் “துடிப்பான இளம் அரசியல்வாதி, இவர் நம் கட்சிக்கு வந்தால் கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல தி.மு.க.வில் ஒரு எழுச்சி கிடைக்கும் என்று நீங்கள் கணக்குப் போட்டு செந்திலை ஏற்கிறீர்கள். அது தவறில்லை, நல்ல அரசியல் மூவ்தான். 

ஆனால் செந்தில்பாலாஜி திறமையான தளபதி மட்டுமில்லை அசுரத்தனமான அரசியல் சாணக்கியவாதி. இத்தனை ஆண்டுகளாய் எங்கள் கட்சியில் அதுவும் அம்மாவின் இருக்கையிலேயே அவர் ஆடிய ஆட்டங்களை கவனித்த, சொந்த அனுபவத்தில் சொல்கிறோம். மிக மிக கவனமாக இருங்கள் செந்தில் பாலாஜியிடம். அம்மாவின் கவனத்தில் விழ வேண்டும் என்பதற்காக தன் பெயரையே மாற்றிக் கொண்டு, சீன் போட்டு எம்.எல்.ஏ. சீட் வாங்கினார். உங்கள் கட்சியின் முக்கியஸ்தர் கே.சி. பழனிசாமிக்கு எதிராக செந்தில் செய்யாத சேட்டைகளா? மாளாத பணம் இருந்த ஒரே காரணத்தினால் மட்டுமே கே.சி.பி.யால் அவரை சமாளிக்க முடிந்தது. 

தன் லாபத்துக்காக யார், எது, என்ன? என்று எதையும் கண்டு கொள்ளாமல் தூக்கிப் போட்டு பந்தாடிவிட்டு அடுத்த கட்ட ஆதாயத்தை நோக்கிச் செல்வதுதான் செந்திலின் வழக்கம். அம்மாவின் அமைச்சரவையில் புது முகமாக அறிமுகமான சில மாதங்களிலேயே ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய செக் வைத்த மனிதர். பன்னீர்செல்வம் சின்னம்மாவை விட பெரிதாய் பயந்ததும், கண்ணில் படாமல் ஒதுங்கியதும் செந்தில்பாலாஜியிடம் தான். கொஞ்சம் அசந்திருந்தால் பன்னீரின் பதவியையே பறித்து உட்கார வைத்திருப்பார். 

ஒரு பெரிய நிர்வாகியை தனக்கு பிடிக்கவில்லை என்றால் கவிழ்க்கவும் செய்வார், அம்மாவுக்கே பிடிக்காத ஒரு நிர்வாகியை தான் நினைத்தால்  மீண்டும் கொண்டு வரவும் செய்வார். இதற்கு சில மாஜிக்கள் மீண்டும் மாண்புமிகுவானதே சாட்சி. சசிகலாவிடம் அவ்வளவு விசுவாசம் காட்டி, அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தவர். சசிகலாவின் குடும்ப உறவுகள் கூட இவரோடு நட்பில் இருந்தனர். அப்பேர்ப்பட்ட சசியையே இன்று இவர் ஒதுக்கிவிட்டு, உங்கள் தரப்புக்கு தாவுகிறார் என்றால் யோசியுங்கள். 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் சிறைசென்றுவிடுவார்கள், அதனால் அடுத்த சி.எம். நான் தான்! என்று தன் நெருங்கிய வட்டாரத்தில் செந்தில் பாலாஜி பேசிய தகவல்கள்தானே அவரது பதவிக்கு வேட்டு வைத்த விஷயங்களில் முக்கியமாய் அமைந்தன!  தாங்கள் சிறை சென்றால் முதல்வர் பதவியை வழக்கம்போல் பன்னீரிடம் கொடுக்கலாமென்று ஜெ., திட்டம் போட்டு வைத்திருக்க, சசி மூலம் அதை தன் பக்கம் திருப்பிவிட செந்தில்பாலாஜி நடத்திய மூவ்கள் கொஞ்ச நஞ்சமா? ஜெ., இருக்கும்போதே அப்படி ஆடியவர், அவரது மரணத்துக்குப் பின் கூவத்தூர் ரகசிய மீட்டிங் மூலம் மீண்டும் முதல்வராகிட பெரிய ஆர்வம் காட்டினார். 

ஆனால் அந்த நேரத்துல சீனியர்களான எடப்பாடியார், வேலுமணி, தங்கமணி எல்லாம் சேர்ந்து அதை கடுமையா எதிர்த்து, ‘ஒரு சீனியரை நியமிங்க சின்னம்மா! இல்லேன்னா நாங்க கெளம்புறோம்.’ அப்படிங்கிற அளவுக்கு பேசிட்டாங்க. ஈகோ பிரச்னையும், பண சிக்கல்களும் மட்டும் இல்லேன்னா சி.எம். போஸ்டிங்குல உட்கார்ந்து இருந்திருப்பார் செந்தில்பாலாஜி. அவரை மினிஸ்ட்ரிக்குள்ளே கூட விடக்கூடாது அப்படிங்கிறதுல சீனியர் மினிஸ்டர்கள் தெளிவா இருந்தாங்க. காரணம், உள்ளே விட்டால் முடிச்சு கட்டிடுவார் அப்படிங்கிற பயம்தான். 

இதே சித்து விளையாட்டுகளை நாளைக்கு உங்க கட்சியிலும் காட்டுவார் செந்தில்பாலாஜி. வாழ்க்கை கொடுத்த அ.தி.மு.க.வையும், சின்னம்மாவையுமே தூக்கிப் போட்டவர், வெறும் பதவி மற்றும் வருமானத்துக்கு வழி செய்யும் உங்க கட்சிக்கு எந்த ரிவிட்டையும் அடிக்க தயங்கமாட்டார். உள்ளே வந்த வேகத்துல பணத்தால் அடிச்சு, தனக்குன்னு ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு, சிக்கலான சூழலில் உங்களோட பதவிக்கே வேட்டு வைக்க முயல்வார் பார்த்துக்குங்க.” என்று சொல்லியுள்ளனர். தளபதி இதையும் யோசிக்கிறாராம்!