முதல்வர் எடப்பாடியிடம் எகிறியும், டி.டி.வி.தினகரனிடம் பம்மியும் வருகிறார் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி. அது நேற்று நடந்த இணைப்பு விழாவில் அப்பட்டமாக வெளிப்பட்டது.  

செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று கரூரில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய செந்தில் பாலாஜியும், மு.க.ஸ்டாலினும் தினகரனை பற்றி மூச்சு விடவே இல்லை. மாறாக செந்தில் பாலாஜியும், மு.க.ஸ்டாலினும் எடப்பாடியையும், அவரது ஆட்சியையும் கிழித்தெடுத்தனர். 

செந்தில் பாலாஜி, பேசும்போது, ‘’ எடப்பாடி பழனிசாமி துரோகத்தைப் பற்றி பேசுகிறார். கூவத்தூரில் முட்டி போட்டு முதலமைச்சரானவர். நான், என்னோடு 5 அல்லது 6 பேர் ஓட்டுப்போடவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அன்னைக்கே வீட்டுக்கு போயிருப்பார். விவசாயம் பார்க்க போயிருப்பார். கிரஷரில் வியாபாரம் பார்க்க போயிருப்பார். ஆனால் இன்று ஏதோ தேசத்தில் நன்மை செய்துவிட்ட மாதிரி பேசுகிறார். 

எடப்பாடி பழனிசாமி அவர்களே நீங்கள் வேண்டுமென்றால் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால் நீங்களும் நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டோம். வரலாறை மறந்துவிட்டு பேச வேண்டாம். ஏதோ நீங்கள் எனக்கு வாய்ப்புக் கொடுத்து வெற்றிபெற செய்ததுபோல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

 

நான் இந்த மேடையில் நின்று சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே இன்று அல்லது நாளை உங்களது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்தித்து, தேர்தலில் வாக்கு கேட்டு நீங்கள் முதல் அமைச்சர் நாற்காலியில் அமருங்கள். நான் அரசியலைவிட்டு விலகிக்கொள்கிறேன். இல்லையென்றால் நீங்கள் அரசியலைவிட்டு விலகிக்கொள்ள வேண்டும்’’ எனப் பேசினார். ஆனால், எந்தக் கட்சியில் இருந்து விலகி வந்தாரோ அக்கட்சியின் தலைவரான டி.டி.வி.தினகரனை பற்றி மூச் விடவில்லை. இதுதான் அதிமுக புள்ளிகளுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஏற்கெனவே திமுகவுடன், அமமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக குற்றச்சாட்டை முன் வைத்து வந்தது. அடுத்து மதுரையில் மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கி சந்தித்ததாக கூறப்பட்டது. அதன் பிறகே செந்தில் பாலாஜி திமுகவுக்கு போகும் முடிவை எடுத்ததாகவும், அவரை திமுகவில் இணையச் சொன்னதே டி.டி.வி.தினகரன் தான் எனவும் தகவல்கள் பறந்தன. சில தினங்களுக்கு முன் சென்னையில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் திடீரென சந்தித்துக் கொண்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் பற்றி கரூர் விழாவில் மூச்சே விடாதது ஏன்? என்கிற சந்தேகம் அதிமுகவினரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது.