தி.மு.க.வுக்கு தாவிய செந்தில் பாலாஜியை யாரெல்லாமோ வாய் வலிக்க வறுத்து தள்ளுகிறார்கள் பல கட்சியை சேர்ந்தவர்கள். அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவேயில்லை அவர். ஆனால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொன்ன விமர்சனத்துக்காக அவரை வகை தொகையில்லாமல் வெளுத்துக் கட்டுகிறது செ.பா. டீம். 

அப்படி என்ன சொல்லிட்டார் பாண்டி... “கட்சி மாறுவதும் நம்பிக்கை துரோகம் செய்வது செந்தில் பாலாஜிக்கு கைவந்த கலை” என்று தெரியாத்தனமாக வாய் திறந்துவிட்டார். அதற்கு செந்தில் பாலாஜியின் கண்ணசைவில் அமைச்சரை விளாச துவங்கிய அவரது ஆதரவாளர்கள்...”கசாப்புக் கடைக்காரனெல்லாம் ஜீவகாருண்யம் பத்தி பேசலாமா? அதை மாதிரிதான் மாஃபா பாண்டியெல்லாம் கட்சி தாவுறவங்களை விமர்சிக்கிறது.

 துவக்கத்துல ஆர்.எஸ்.எஸ்.ஸை அடிப்படையா வெச்சு பி.ஜே.பி. இருந்த இவரு அப்புறம் தே.மு.தி.க. உச்சம் பெற்று வருதுன்னு சொல்லி. அங்கே தாவினார். காசை கொடுத்து அந்த கட்சியில சீட் வாங்கி எம்.எல்.ஏ.வானார். தனக்கு பெரிய அடையாளம் கொடுத்த விஜயகாந்துக்கு துரோகம் பண்ணிட்டு, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வுல இணைஞ்சார். ஆளைப்பிடிச்சு சீட் வாங்கி எம்.எல்.ஏ.வாகி அமைச்சர் ஆனார். 

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு பன்னீர் அணிக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததாலே அங்கே போயி நின்னு தர்மயுத்தத்துல சீன் போட்டாரு. பி.ஜே.பி. தலைமை பன்னீரை ‘ஆளும் அணியோடு சேர்’ அப்படின்னு நெருக்கடி கொடுத்தப்ப, டெல்லிக்கு விசுவாசியா இருந்து பன்னீரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்துனதே பாண்டியராஜன் தான். தங்களோட டார்கெட்டை சாதிச்சு கொடுத்ததுக்காக அணிகள் இணைஞ்சப்ப பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி ஒன்றை கொடுக்க பி.ஜே.பி. உத்தரவு போட்டுச்சு. அதன் படி ஒரு டம்மி அமைச்சரா இவரை உலவ விட்டிருக்குது எடப்பாடி டீம். ஆக இப்படி எந்த கட்சிப் பக்கம் செல்வாக்கு காத்து அடிக்குதோ, எந்த அணி பக்கம் அதிகார காத்து அடிக்குதோ அந்தப் பக்கம் சாயுறதும், பணத்தை கொட்டியும், பவர் செண்டர்களை நைஸ் பண்ணி காரியம் சாதிக்கிறதும், பைபாஸ் ரூட்ல அதிகாரத்துக்கு வர்றதும்  மாஃபா பாண்டிக்கு கை வந்த கலை.

 

இப்ப எழுதி வெச்சுங்க, அடுத்து எப்போ சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தி.மு.க.வின் செல்வாக்கு ஏகபோகமா அதிகரிச்சிருக்கிறதை பார்த்து, இங்கே வந்து பாண்டி சேர்ந்தாலும் ஆச்சரியமே இல்லை. ஆனா ஒண்ணு இங்கே வந்தால் அடிப்படை தொண்டனா மட்டும்தான் இருக்கணும், பதவி, சீட்டு, அமைச்சர் கனவுன்னு நினைப்போட வர்ற வேலை வெச்சுக்க கூடாது!” என்று விளாசிக் கொட்டியிருக்கிறார்கள். ஒத்த வார்த்தை சொன்னதுக்கு இம்புட்டு திட்டாய்யா? என்று நோகிறதாம் மாஃபா வட்டாரம்.