senkottayan lobby against edappadi palanisamy

செயின் ஜார்ஜ் கோட்டையில் ஆளுங்கட்சியினர் மத்தியில் இப்போது பரபரப்பாக கிசுகிசுக்கப்படும் விஷயம் ‘எடப்பாடியார், ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக செங்கோட்டையன் லாபி செய்ய துவங்கிவிட்டார்.’ என்பதுதான். 

இந்த ஷாக் நியூஸை சற்றேக் கிண்டிக் கிளறிப் பார்த்தால் உண்மையின் சாயல் இல்லாமல் இல்லை. ஒருகாலத்தில் போக்குவரத்து துறையில் ஓஹோவென புகழ் பெற்றிருந்த செங்கோட்டையனின் சமீப நாட்கள் ரூட் வேறு திசையில் போகிறது என்கிறார்கள் கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களை துல்லியமாக அறிந்த சீனியர்கள். 

சசிகலா சிறை செல்லும் முன் செங்கோட்டையனிடம் தான் முதல்வர் பொறுப்பை ஒப்படைப்பதாக இருந்தார். ஆனால் சற்றே பிடியை விட்டாலும் கூட மக்கள் நாயகனாகிவிடுவார் செங்கோட்டையன்! எனும் பயத்தினாலேயே எடப்பாடியாரை கொண்டு வந்து அமர்த்தினார். இன்று என்னதான் எடப்பாடியார் முறுக்கிக் கொண்டு நின்றாலும் கூட, முதலமைச்சர்! எனும் பதவியை பிடுங்கிவிட்டாலோ அல்லது ஆட்சிகாலம் முடிந்துவிட்டாலோ அவருக்கு பின்னால் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது சசிக்கு நன்கு தெரியும்.

ஆனால் செங்கோட்டையன் அப்படியில்லை. ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் தன்னை முழுமையாக ஃபோகஸ் செய்து ஹிட்டடித்துவிடுவார். அதற்கு சிம்பிள் உதாரணம், இன்று தமிழகத்தின் அரசு துறைகளில் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கும் ஒரே துறை அவரது பள்ளிக் கல்வி துறை மட்டும்தானே!

ஆக இப்படியான சூழலில்தான் செங்கோட்டையனை பற்றி ‘எடப்பாடியாருக்கு எதிராக லாபி செய்ய துவங்கிவிட்டார்’ எனும் பேச்சு எழுந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக செங்கோட்டையனின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் ‘உற்பத்தி துறையில் தமிழகம் இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சியை குஜராத் எட்ட இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் சிலர் இந்த உண்மை புரியாமல் அந்த மாநிலத்தை பற்றி பெருமையாக பேசுகின்றனர்.’ என்று நேரடியாக அடித்தார். குஜராத்தை தாக்குவதென்பது மோடியை தாக்குவதற்கு சமம் அல்லவா. மைனாரிட்டியான இந்த ஆட்சி டெல்லியின் புண்ணியத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை தாக்குவதென்பது ஆட்சியை காவு கொடுக்க தயார் என்பதற்கான சமிஞையாயிற்றே என்பதே அதிகார மையத்தின் பயம். 

இந்த விவகாரம் எடப்பாடியாரின் கவனத்துக்குப் போக, டென்ஷாகிவிட்டாராம் மனிதர். ஆனாலும் வெகு சீனியரான செங்கோட்டையனிடம் எதையும் பேச முடியாத சூழ்நிலை. இதற்குள் செங்கோட்டையனின் பேச்சு டெல்லியின் கவனத்துக்குப் போக, அங்கிருந்து சில என்கொயரிகள் முதல்வர்களின் கேபினுக்கு வந்து விழுந்திருக்கின்றன. பன்னீருக்கோ செங்கோட்டையனிடம் எதையும் கேட்குமளவுக்கு தைரியமில்லை. 

சரி செங்கோட்டையன் இப்படி திடீரென உள் கலகம் செய்ய துவங்க காரணம் என்ன? என்று கேட்டால், கழக சீனியர்களின் விரல்கள் சுட்டிக் காட்டுவது தினகரனை. அதாவது ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான் எம்.எல்.ஏ. ஆவேன்! என்றார் தினகரன். சொன்னபடி ஆனார். அதே போல் ‘இன்னும் 3 மாதங்களில் இந்த ஆட்சியை கவிழ்ப்பேன்’ என்றிருக்கிறார். அதை நிறைவேற்றுவதற்கான வேலைகளை துவங்கிவிட்டாராம். அந்த வகையில்தான் செங்கோட்டையனை உசுப்பியிருக்கிறார் தினகரன் என்கிறார்கள். 

’ அம்மா அரும்பாடுபட்டு கொண்டு வந்த இந்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் எனக்கில்லை. என்னை பொறுத்த வரைக்கும் எங்களுக்கு துரோகம் பண்ணினவங்க முதல்வர்களா இருக்க கூடாது. நீங்க சி.எம்.ஆகுறதா இருந்தா முழு ஒத்துழைப்பு கொடுக்க நானும், என் தரப்பு ஆளுங்களும் தயார். தலைவரின் தோளோடு நின்று கட்சி வளர்த்து, அம்மாவின் கட்டளைப்படி அரசியல் செய்த நீங்க அந்த சேர்ல உட்காருவதுல எனக்கோ, சின்னம்மாவுக்கோ எந்த வருத்தமுமில்லை. ஆனா இவங்க ரெண்டு பேரும் யாரு? என்ன அரசியல் பாரம்பரியம் இருக்குது? துரோகத்தால் அடையாளம் காட்டப்பட்ட பழனிசாமியிம், நன்றிகெட்ட குணத்தால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீரும் முதல்வர்களாக தொடர கூடாது. அவர்கள் இருக்கும் ஆட்சியை கலைக்க நான் தயங்கமாட்டேன். 

ஆனால் தகுதியான சீனியர் நீங்க வந்தால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.” என்று செங்கோட்டையனுக்கு தனது தூதுவர் மூலம் ஓலை அனுப்பினாராம் தினகரன். 

வெறும் வார்த்தை ஜாலத்தால் வீழ்த்துபவரில்லை தினகரன், உள்ளே என்ன நினைக்கிறாரோ அதை வெளியே தடாலடியாய் பேசிவிட்டு போகும் ரகம்! என்பதை அறிந்த செங்கோட்டையனும் இதை முழுமையாக நம்பியிருக்கிறார். 

என்னதான் எடப்பாடியின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தாலும் கூட செங்கோட்டையனின் சீனியாரிட்டியும், கரீஷ்மாவும் கட்சியின் கடைசி தொண்டனும் அறிந்ததே. அவர் கையில் அதிகாரம் போனால் நின்று விளையாடுவார். தினகரனின் உசுப்பலுக்கு பின் தனது வெயிட்டை தானே அறிந்திருக்கும் நிலையில்தான் செங்கோட்டையன் லேசாக சிலிர்ந்து எழும் நிகழ்வு நடந்திருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 

குஜராத்தை செங்கோட்டையன் உரசிப்பார்த்தது ஒரு சமிஞைதானாம். இதை புரிந்து கொண்டு எடப்பாடியும், பன்னீரும் இறங்கி வந்து என்ன ஏதுவென்று பேசாவிட்டால் தினகரனின் முழு சப்போர்ட் பின்னணியிலிருக்க, தனது ஆதரவாளர்களின் பலத்துடன் செங்கோட்டையன் மிக வெளிப்படையாகவே எடப்பாடியாருக்கு எதிராக புரட்சி செய்ய துவங்குவார்! என்கிறார்கள். 

கவனிப்போம்!