ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்படதை தாம் வரவேற்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப்படுத்திய வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிர்மலா தேவி கைது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. அந்த செய்தியில், ஆளுநரை தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நக்கீரனின் இந்த செய்தி குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார், அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், சிந்தாதரிப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. முன்னதாக சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருக்கும் நக்கீரன் கோபலை சந்திப்பதற்காக சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். 

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், முன்னாள் தமிழ் மாநில காங். தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நக்கீரன் கோபலை சந்திக்க சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனி நபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அந்த வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடர்ந்திருப்பதை தான் வரவேற்பதாகவும் தினகரன் கூறினார். பத்திகையாளர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் 1996 ஆம் ஆண்டு என் மீது அவதூறு வழக்கு வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு 6 மாதம் சிறை தண்டனை பெற்று கொடுத்தேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.