வைகை ஆற்றில் தெர்மாகோல் விட்டு சர்ச்சையில் சிக்கியது, மதுரை சிட்னியாக மாறும் என சொல்லி மரண கலாய் வாங்கியது. மதுரையில் எய்ம்ஸ் என்பதற்கு பதில் எய்ட்ஸ் மருத்துவமனை ஷாக் வரவழைத்தது என மெர்சலாக பேசி கலாய் வாங்கிவதில் செல்லூர் ராஜூவுக்கு நிகர் அவர்தான்.  

இந்நிலையில், மதுரையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில் விளையாட்டுத் துறையில் 8-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வியை கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். 

மாரத்தான் போட்டியில் சிறுவர்- சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும். மதுரை மாநகரம், தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக முன்மாதிரியாக உள்ளது. சினிமாவில்தான் மதுரைக்காரன் என்றால் கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது போல் சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், பாசத்திற்காக எதையும் செய்வார்கள் என்றார் செல்லூர் ராஜூ.  

விஸ்வாசம் படத்தில் தென் மாவட்டங்களை மையப்படுத்தி கதையமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளார். நானும் மதுரைக்காரன் என்று வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வருவார். இப்படி இருக்கையில் மதுரைக்காரரான செல்லூர் ராஜு, மதுரைகாரர்களை பற்றி பாசக்காரர்கள், பாசத்திற்காக எதையும் செய்வார்கள் என பேசியதால்  தல அஜித்தின் வெறிபிடித்த தீவிர ரசிகராக இருப்பதாக தெரிகிறது என சொல்கிறார்கள். இதனால் தல அஜித்  ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.