இதுவரையில் ‘வெள்ளந்தி மனிதர்’ என்று மட்டுமே அடையாளமிடப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, சமீபத்திய பேச்சு மூலம் ’ஆணவ அமைச்சர்’ என்று ப்ரமோஷன் பெறுகிறார்! என்று  ராஜூவை ரெளத்திரம் பொங்க விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

மதுரை எம்.பி. தொகுதியின் வேட்பாளராக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் மகன் ராஜ் சத்யன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது அறிமுகவிழா சமீபத்தில் மதுரையில் நடந்திருக்கிறது. அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ’சர்வே எல்லம் அ.தி.மு.க.வுக்கு எதிரா இருக்குதுன்னு ரொம்பவே பீதிய கெளப்ப ரெடி பண்ணினாங்க. ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகல. 

ரெண்டரை மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறுமுன்னு கருத்துக் கணிப்பு சொல்லிட்டு இருந்தாய்ங்க. ஆனா பொங்கலுக்கு ரெண்டு ஐநூறு ரூபா நோட்டுக் கொடுத்தோம், அப்புறம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவங்களுக்கு ரெண்டாயிரம் ரூபாய் வழங்கினோம். அம்புட்டுதான், எங்களோட வெற்றி உறுதியாகிப்போச்சு.” என்று சொல்லி பெரிதாய் சிரித்திருக்கிறார். இதை மேற்கோள்காட்டிப் பேசும் அரசியல் விமர்சகர்கள் “ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்கோம், இதனால ஜெயிக்கப்போறோமுன்னு வெளிப்படையான ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார் அமைச்சர். 

எந்த பயமுமில்லாம ஒரு அமைச்சரே இப்படி பேசுறார்னா தேர்தல் நடத்தை விதிகள் எவ்வளவு கேவலமா இருக்குதுன்னு பாருங்க. இதையே ஆதாரமாக்கி தேர்தல் தொடர்பா கடும் நடவடிக்கை எடுக்கலாம் ஆணையம். அமைச்சர் செல்லூர் ராஜூவின் பதவி வரைக்கும் தாராளமா வேட்டு வைக்கலாம். மக்களை பிச்சைக்காரர்களாக்கிட்டோம் அப்படின்னு வெளிப்படையா கொக்கரிக்கிற தைரியம் இவங்களுக்கெல்லாம் வந்தது இந்த மாநிலத்தோட சாபக்கேடு.” என்று கொதிக்கிறார்கள். யூ டூ செல்லூரார்?