Asianet News TamilAsianet News Tamil

கடந்த திமுக ஆட்சி போல் மீண்டும் நில அபகரிப்பு.. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவு..? அதிர்ச்சியை கிளம்பும் சீமான்

புதிய நில பரிமாற்ற வழிகாட்டு நெறிமுறையானது, கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகளைப்போல், மீண்டும் ஆளுங்கட்சியினரால் அரசு புறம்போக்கு நிலங்கள் பெருமளவில் அபகரிக்கப்படக்கூடுமோ என்ற அச்சத்தைப் பொதுமக்களிடத்தில் உருவாக்கியுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 

seeman urges The dmk government should immediately withdraw the new land transfer guidelines
Author
Tamilnádu, First Published May 27, 2022, 2:04 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் “அரசு நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தவர்களே பட்டா பரிமாற்றம் மூலம் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்ற தமிழக அரசின் புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு நிலங்கள் பெருமளவில் கொள்ளைபோக வழிவகுக்கும் வகையில் திமுக அரசால் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது.

தனியார் நிறுவனங்களின் விரிவாக்க பணிகளின்போது, அருகே அரசு நிலங்கள் இருப்பதால் தொய்வு ஏற்படுவதாகவும், இதனால் விரிவாக்க பணிகளைச் செயல்படுத்த முடியாமல் தனியார் முதலாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, தமிழக அரசு புதிய நில பரிமாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, அரசு நிலத்திற்கு ஈடாக மாற்று நிலங்களைக் கொடுத்தால் தனியார் முதலாளிகள் அரசு நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அந்த நிறுவனங்கள் வேறு பகுதியில், அதே அளவிலான இடத்தை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்ற பெயரில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தவர்களே பட்டா பரிமாற்றம் மூலம் நிலத்தைக் கையகப்படுத்திக் கொள்ள வழிவகைச் செய்வதன் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் கொள்ளைபோக தமிழக அரசு வாசல் திறந்துவிட்டுள்ளது.

ஆட்சியாளர்களும், பெருநில விற்பன்னர்களும் நகரின் மையப்பகுதியில் உள்ள விலைமதிப்புமிக்க நிலங்களை ஆக்கிரமிக்கவும், அதற்குப் பதிலாக விலைமதிப்பு குறைந்த ஒதுக்குப்புறமான நிலங்களை கைமாற்றி அரசை ஏய்க்கவும், தேவைக்கேற்ப நிலத்தின் விலையைக் குறைத்து அல்லது அதிகரித்துக் காட்டி முறைகேட்டில் ஈடுபடவும் இவ்வுத்தரவு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2500 ஏக்கர் நிலத்தை அங்குள்ள மக்களுக்கே தெரியாமல் முறைகேடாக ஒரே நாளில், தனி நபருக்குப் பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் நிலங்களையே ஒட்டுமொத்தமாக ஒரே நாளில், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்யும் ஆபத்தான சூழல் உள்ள நிலையில், அரசின் தற்போதைய உத்தரவானது, அரசு நிலங்கள் மிக எளிதாகக் கொள்ளைபோகவே வழிவகுக்கும்.

இது கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகளைப்போல், மீண்டும் ஆளுங்கட்சியினரால் அரசு புறம்போக்கு நிலங்கள் பெருமளவில் அபகரிக்கப்படக்கூடுமோ என்ற அச்சத்தைப் பொதுமக்களிடத்தில் உருவாக்கியுள்ளது.
அது மட்டுமின்றி, மலைப்பகுதி, யானை மற்றும் புலி வழித்தடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இதேபோன்ற ஆக்கிரமிப்பு சிக்கல் வந்தால், அது வனத்துறை மூலம் கையாளப்படும் என்று அதன் மற்றொரு வழிகாட்டல் உத்தரவு சுட்டுகிறது. 

இது முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் தனியார் பெருமுதலாளிகள் தங்களின் வணிகத் தேவைக்காக ஆக்கிரமித்து, அபகரிக்கவே உதவும். ஆகவே, அரசு நிலங்களை அபகரிக்கவும், காடுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொள்ளை போகவும் வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: என் தம்பி மகளுக்கே சீட் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அதே பள்ளிக் கூடத்திற்கே போய் அதிரவிட்ட ஸ்டாலின்.

Follow Us:
Download App:
  • android
  • ios