நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால், அங்கு திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

சென்னை திருவொற்றியூரில் சுரங்கபாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போராட்டம்

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்ததால் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சீமான் மயக்கம்

இந்நிலையில், பொதுமக்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால், அங்கு திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் செல்வதும், சீமான் மயக்கமடைவதும் போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.