கஜா புயல் கரையை கடந்த நிலையில் தென்னை விவசாயிகள் தான் மிகப்பெரிய துயரில் உள்ளனர். நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சையில் கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் நாற்பது ஆண்டுகள் வரை நீடித்து நின்று கொண்டிருந்த ஏராளமான தென்னை மரங்களை வேரோடு சாய்த்துச் சென்றுவிட்டது. நெற்பயிர்கள் சேதம் என்றால் கூட நிவாரணத்துடன் கடனை உடனை வாங்கி விவசாயிகள் சமாளித்துவிடுவார்கள்.

ஆனால் ஒரு தென்னை மரத்தை உருவாக்க வேண்டும் என்றால் குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும். மேலும் தென்னை மரங்கள் வளர்ந்திருந்த இடத்தில் உடனடியாக வேறு விவசாயத்தையும் பார்க்க முடியாது. பத்து தென்னை மரங்கள் வைத்து பலன் அடைந்த விவசாயிகள் முதல் தென்னை மரங்களை மட்டுமே தங்கள் வாழ்வதாரமாக கொண்டிருந்த விவசாயிகள் என பலரும் தங்கள் தென்னை மரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

ஒட்டு மொத்தமாக ஒரு லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டிருக்லாம் என தமிழக அரசு தோரயமாக கணக்கிட்டுள்ளது. ஆனால் சாய்ந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை ஏராளம் என்று விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை சீமான் நேரில் பார்வையிட்டார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் ஒரு கோடி தென்னை மரங்கள் நாசமாகிவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அதிகாரிகள் உண்மையை வெளியே கூறாமல் மறைக்க முயல்வதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். தேசிய ஊடகங்களும் கூட கஜா புயலின் பாதிப்புகளை பெரிதுபடுத்தவில்லை என்று அவர் குறைபட்டுக் கொண்டார். தென்னை மரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றுசீமான் கேட்டுக் கொண்டார்.