Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் ஐபிஎல் நடந்தால் உடனடி விளைவுகளை சந்திக்க நேரிடும்!! சீமான் எச்சரிக்கை.. ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு

seeman oppose ipl conduction in chennai
seeman oppose ipl conduction in chennai
Author
First Published Apr 9, 2018, 2:40 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்துவதால் மைதானத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னெடுங்காலமாக இந்திய அரசால் வஞ்சகம் செய்யப்பட்டு அதன்மூலம் தமிழக நிலவியல் மீது போர் தொடுக்கப்பட்டு இருப்பதன் விளைவாகத் தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரியும் மிகப்பெரும் போராட்டங்கள் வெடித்து தமிழர் நிலமே போர்க்கோலம் பூண்டிருக்கிற இச்சூழலில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பி நீர்க்கச் செய்ய நடக்கும் சதித்திட்டமாகும். இச்செயலை இனமானத் தமிழர்கள் யாவரும் ஒருபோதும் அனுமதித்திடக் கூடாது.

seeman oppose ipl conduction in chennai

காவிரி நதிநீர் சிக்கலென்பது காவிரிப்படுகை விவசாயிகளின் சிக்கல் மட்டுமன்று. அது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உயிர்நாடிச் சிக்கல். தமிழகத்தில் 20 மாவட்டங்கள் குடிநீரையும், 12 மாவட்டங்கள் நீர்ப்பாசனத்தையும் காவிரி நதிமூலம்தான் பெற்றுக் கொள்கின்றன. 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காவிரி நதிநீரையையே முழுமையாகச் சார்ந்திருக்கிறார்கள். அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த காவிரிச் சிக்கலில் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், பலதரப்பட்ட அமைப்புகளும், இளைஞர்களும், மாணவர்களும், பொது மக்களும் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிற தற்காலச் சூழலில் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் நடத்துவது துளியளவும் ஏற்புடையதல்ல. சோறுக்கும், நீருக்குமே ஆபத்து நேர்கிற இக்கட்டான நெருக்கடிக்காலக் கட்டத்தில் கேளிக்கை கொண்டாட்டங்களும், விளையாட்டுப் போட்டிகளும் தேவையற்றது.

seeman oppose ipl conduction in chennai

இன்றைக்கு நாம் விவசாயிகளுக்காகப் போராடாவிட்டால் நாளை நாம் சோற்றுக்காகப் போராட வேண்டி வரும் என்கிற நுட்ப அரசியலை உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொருவரும் போராட்டக் களத்திற்கு வர வேண்டும். இன்றைக்கு ஒரு விவசாயி சாகிறாரென்றால் நாளை நாம் உணவின்றிச் சாகப்போகிறோம் என்பதற்கான முன்னெச்சரிக்கை என்பதனை உணர வேண்டும். இன்றைக்குக் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு நாம் உண்ணுகிற உணவானது, எங்கோ ஒரு மூலையில் வெயிலிலும், மழையிலும் ஒரு ஏழை விவசாயி மாடாய் உழைத்துதான் நமது தட்டுகளுக்கு வந்திருக்கிறது என்பதை நன்றிப்பெருக்கோடு நினைத்துப் பார்க்க வேண்டும். காவிரி நதிநீர் உரிமை கேட்டு விவசாயிகள் கண்ணீரோடு களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிற இச்சூழலில், நாம் அவர்களுக்காகப் போராடாது கிரிக்கெட் போட்டிகளிலேயே லயித்துக் கொண்டு இருக்க விளைவது மனிதத்தன்மையேயற்ற துரோகச்செயலாகும். அச்செயலினை தமிழின இளையோர்களும், மாணவர்களும் முழுதுமாய் புறக்கணித்திட வேண்டுமாய் உங்களது உடன்பிறந்தவன் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

seeman oppose ipl conduction in chennai

கேளிக்கைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நாட்டம் கொண்டிருக்கிற ஒரு இன மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய முடியாது என்பது வரலாறு நமக்குத் தந்திருக்கிற படிப்பினைச் செய்தியாகும். தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக்கொண்டிருக்கும்போது தமிழகத்தின் தலைநகரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவமதிக்கிறக் கொடுஞ்செயலாகும். ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைவது வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.

ஆகவே, வரும் ஏப்ரல் 10 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டியினை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், தமிழர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு எட்டும்வரை ஐ.பி.எல்.போட்டிகளை வேறு மாநிலத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். நிர்வாகத்தினைக் கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தமிழக அரசானது உரிய அழுத்தம் கொடுத்து அப்போட்டிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும், உணர்வெழுச்சியினையும் துளியும் பொருட்படுத்தாது ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்திட முற்பட்டால் அதற்குப் பிறகு மைதானத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க நேரிடும் என்றும், போட்டி நடக்கவிருக்கிற அன்றே மிகப்பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios