”நாடு முழுவதும் வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் வேலூரில் மட்டும் தேர்தலை நிறுத்தியதன் மூலம் தேர்தல் ஆணையம் எவ்வளவு பாரபட்சமானது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்’ என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சின்ன கரியப்பா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். பின்னர் நிருபர்களிடம் நீண்ட பேட்டி அளித்த அவர்,”வேலூரில் மட்டும் தேர்தலை ரத்து செய்ததன் மூலம் தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. அங்கு வாக்குக்குப் பணம் கொடுத்த வேட்பாளரைக் கண்டுபிடித்து தண்டித்திருக்கவேண்டும். . கபடி போட்டியில் யார் தவறு செய்கிறார்களோ அவர் தான் வெளியேற்றப்படுவார். அணியில் மற்றவர்கள் விளையாடுவார்கள். அப்படித்தான் வேலூரில் திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும்.

எங்களைப் போன்றவர்கள் கட்டுத்தொகை [டெபாசிட்] கட்டக்கூட முடியாமல் பெரும்பாடுபட்டு நிதி திரட்டி, குருவி போல சேர்த்து செலவழித்தோம். இப்போது அந்தத் தொகையை தேர்தல் ஆணையம் திருப்பிக்கொடுக்குமா?

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தாலோ அல்லது ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்தாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அரசியலமைப்பில் மாற்றம் தேவை. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை.

தேர்தல் நடைமுறையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக் கொண்டு வாக்குப்பதிவு முடிந்து 32 நாட்களுக்குப் பின்னர் முடிவை அறிவிக்கப் போகிறார்களாம். நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்த இயலவில்லை. ஆனால் ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்று பேசுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.