கட்சியே ஆரம்பிக்காத ரஜினி, திமுகவுக்கு மாற்றா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக நாளிதழான முரசொலியில் நேற்று ரஜினியிடம் அவரது ரசிகர்கள் கேள்வி கேட்பது போன்று செய்தி வெளியாகி இருந்தது. முரசொலியில் அண்மை காலமாக எடப்பாடி பழனிச்சாமி, மோடி, தினகரன் போன்றோரை விமர்சித்து செய்திகள் வந்த நிலையில், ரஜினியை விமர்சித்து கட்டுரை வெளியானது.

 

ரஜினியை அவரது ரசிகர்கள் கேள்வி கேட்பது போன்று அது அமைந்திருந்தது. ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்பதால், திமுகவின் வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் ரஜினியை திமுக அட்டாக் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. திமுகவுக்கு ஒரே போட்டியாளர் ரஜினி என்று திமுக கருதுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. 

இந்த நிலையில் சீமான், கட்சியே ஆரம்பிக்காதவர் ரஜினி என்றும் அவரே அவரது கருத்துக்கு எதிராக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், குழப்பத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திமுகவுக்கு மாற்று என்ற கருத்தை நகைச்சுவையாக கடந்து சென்றுவிட வேண்டும் எனக் கூறினார்.

கட்சி அறிவிக்கவில்லை; கொடி அறிமுகப்படுத்தவில்லை; 70 ஆண்டுகளை தொடப்போகிற கட்சியிடம் 26 விழுக்காடுதான் வாக்கு வங்கி உள்ளது. நீங்க இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. வந்த உடனேயே ஆட்சி அமைச்சிடுவோம். இது எல்லாம் பைத்தியக்காரன் கனவிலேயேம் கூட வராது. முதல்ல ரஜினிகாந்த் என்ன சொல்றாங்க...

ஆன்மீக அரசியல் என்கிறார். மற்றொரு அறிவிப்பில் சாதிய, மத உணர்விருப்பவர்கள் இந்த மன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்கிறார். அப்படி என்றால் அவரே கட்சியை ஆரம்பிப்பதற்கு தகுதி அற்றவர். நீங்களே இமயலை சென்று வருகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் மத உணர்வாளர்தான். மதம் சார்ந்ததுதானே ஆன்மீக அரசியல். நீங்களே தகுதியற்றவர்களாக இருக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிலைப்பாடு, கொள்கை முடிவு எதுவுமே சரியில்லை என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.