Asianet News TamilAsianet News Tamil

காலையில் திமுக , மாலையில் நாம் தமிழர்..!! போராட்டக் களமாகும் தமிழகம்..

நாம் தமிழர் கட்சி உறவுகள் வருகிற 07.05.2020 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை அவரவர் வீட்டு வாயிலில் தம் குடும்ப உறுப்பினர்களுடன் இடைவெளிவிட்டு நின்று மேற்படி கோரிக்கைகள் கொண்ட பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் 15 நிமிட நேரம் கையில் ஏந்துங்கள். 

seeman announce protest for kaveri
Author
Chennai, First Published May 6, 2020, 3:32 PM IST

மதுக்கடையை எதிர்த்து திமுக போராட்டம் அறிவித்துள்ள நிலையில் காவிரி உரிமைக்காக சீமான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  தமிழக விவசாயத்தின் உயிர்நாடித்துடிப்பான காவிரிச் சமவெளியைப் பாலைவனமாக்க துடிக்கும் மத்திய அரசுகளின் மற்றொரு முயற்சிதான் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஊரடங்கு காலத்தில் சத்தமின்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னுடைய கட்டுபாட்டில் கொண்டுவர முனையும் மத்திய பாஜக அரசின் நயவஞ்சக செயல்.1983 ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த காவிரிச் சமவெளி விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே 1989 ஆம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.  அப்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மிக நீண்ட விவாதங்களுக்கு பின்னர் வழங்கிய இறுதி தீர்ப்பானது ஏறத்தாழ முப்பதாண்டுகால தமிழக விவசாயிகளின் சட்டப்போராட்டத்தின் விளைவு. ஆனால் அந்த தீர்ப்பின்படி அதிக அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழகத்தின் எதிர்ப்பையும் அலட்சியப்படுத்தி பகுதியளவே  தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய பாஜக அரசு அமைத்தது.

seeman announce protest for kaveri

அப்போது வேறுவழியின்றி நாம் அதை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.ஏனென்றால் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற இறுதிதீர்ப்புகள் தந்த சட்டப் பாதுகாப்பும், வரையறுத்த நெறிகாட்டு வழிமுறைகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தை சுதந்திரமாக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகவே உருவகப்படுத்தியிருந்தன. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசின் முடிவென்பது அந்த பகுதியளவு தன்னாட்சி அமைப்பையும் தகர்த்து தன்வயப்படுத்தும் சூழ்ச்சியே.இதன் மூலம் மாநிலங்களுக்கு சொந்தமான நதிநீர் உரிமையை மத்திய அரசு தன் அதிகாரத்திற்குள் கையகப்படுத்த முனைகிறது.  எப்படி மாநில அரசுகள் கல்வி, மருத்துவம் , கனிம வளங்கள் உள்ளிட்ட தனது அடிப்படை அதிகார உரிமையை மத்திய அரசிடம் இழந்து நிற்கிறதோ, அப்படி நதிநீர் உரிமையையும் இழக்க வைக்கும்  நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இதுவும். இது வெறும் காவிரி மேலாண்மை ஆணையப் பணியாளர்களின் ஊதிய முறைபடுத்தலுக்கான நிர்வாக திட்டம்தான் என்று சொல்லும் மாநில அரசின் வாதம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஏனெனில் ஆணையம் அமைக்கும்போதே ஆணையத்திற்கான செலவினங்களை மாநிலங்களே பிரித்துக்கொள்ள வேண்டுமென நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு தெளிவாக வரையறுத்துவிட்டது. 

seeman announce protest for kaveri

எனவே நதிகளின் நீர் உரிமைகள் மீதான அதிகாரத்தை தனது அமைச்சகத்தின் கீழ்கொண்டுவந்து , எப்படி இத்தனை ஆண்டுகாலம் நதிநீர் பிரச்சனைகளை வைத்து, மாநிலத்துக்கு, மாநிலம் அரசியல் இலாபம் அடைந்ததோ அந்த விளையாட்டை மீண்டும் தொடங்கியுள்ளது மத்திய அரசு. நீர் பங்கீட்டின் அளவு, வழங்கும் காலம், கணக்கிடுதல், கண்காணிப்பு,  அணைகள் கட்டும் உரிமை உள்ளிட்ட அதிகாரங்களை கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அமைச்சகத்தின் கீழ், ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் என்பது அந்த அமைச்சர் சார்ந்த கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு சாதகமாகவே முடியும். இவைதான் கடந்த கால காவிரி வரலாறு காட்டும் உண்மை.  மத்தியில் ஆளும் பாஜக அரசின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் சென்றால், கர்நாடக மாநில பாஜக அரசின் மேகதாது உள்ளிட்ட தற்போது தடையாகியுள்ள தமிழகத்திற்கு எதிரான காவிரி நதி சார்ந்த திட்டங்களை அது மிக எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். 

seeman announce protest for kaveri

இதையெல்லாம் தவிர்க்கவே தம்பி விக்னேசு உள்ளிட்ட பல தமிழர்களின் உயிர்களை இழந்து நாம் போராடி பெற்ற உரிமைதான் காவிரி மேலாண்மை ஆணையம் எனும் தன்னாட்சி அமைப்பு.முப்பதாண்டுகால தமிழர்களின் போராட்ட வரலாற்றின் விளைவாக வென்றெடுத்த காவிரி உரிமை மீண்டும் பறிபோய்விடாமல் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணமிது.அதற்காக காவிரி உரிமை மீட்புக் குழு  நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவையும், பெருந்திரளான பங்கேற்பையும் வழங்கவிருக்கிறது. அதன்படி நாம் தமிழர் கட்சி உறவுகள் வருகிற 07.05.2020 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை அவரவர் வீட்டு வாயிலில் தம் குடும்ப உறுப்பினர்களுடன் இடைவெளிவிட்டு நின்று மேற்படி கோரிக்கைகள் கொண்ட பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் 15 நிமிட நேரம் கையில் ஏந்துங்கள். மேலும் தங்களது போராட்டப் பங்கெடுப்பை  #SaveCauveryAuthority# காவிரிஆணையம்காப்போம்என்ற குறிச்சொல்லோடு சமூக வலைத்தளங்களில் நேரலையாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்து இந்த நெருக்கடியான ஊரடங்கு சூழலிலும் நம்முடைய வலுவான எதிர்ப்பினை ஆளும் அரசுகளுக்கு உணர்த்திட வேண்டும். 

seeman announce protest for kaveri

மீத்தேன், ஐட்ரோ கார்பன், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் மத்திய அரசின் இரட்டைவேடம், கர்நாடக அரசின் மேகதாது அணை என தொடர்ச்சியாக   சந்தித்த பேராபத்துகளிலிருந்து நாம் அனைவரும் ஒண்றிணைந்து எப்படி  காவிரிச் சமவெளியை மீட்டோமோ அப்படியே இப்போதும் மத்திய அரசின் இந்த நீர்வளத்துறை அமைச்சக சூழ்ச்சியிலிருந்து உறுதியாக நாம் நமது உரிமையை மீட்டெடுப்போம்.தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் காவிரி விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் , தோழமை இயக்கங்களும் தோளோடு தோள்கொடுத்து துணைநின்று போராட முன்வர வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios