Asianet News Tamil

வேட்பாளரின் மனைவி போட்ட கள்ள ஓட்டு... ஒரு ஓட்டு வித்தியாசத்தில் MLA வெற்றி...49-P சேர்த்தபோது நடந்தது என்ன...?

சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தனது பிளாக்கில் எழுதியிருக்கும் 49P பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்கள் இதோ... 49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு...  உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

Section 49P: Vijay-starrer Sarkar creates awareness
Author
Chennai, First Published Nov 10, 2018, 12:54 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சர்க்கார் படத்தின் காரணமாக ”கள்ள ஓட்டு” மற்றும் அது தொடர்பான “49(P)" தேர்தல் விதிமுறை குறித்து பொதுவெளியில் விவாதம் நடக்கிறது. படத்தில் “ஒரு ஓட்டின்” முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கப்படும். உண்மையிலேயே, “ஒரு ஓட்டு” வித்தியாசம் ஒரு சட்டமன்றத் தேர்தலில் பலத்த அதிர்வை ஏற்படுத்திய  பழைய உண்மை நிகழ்வு ஒன்று உள்ளது.  அதனைப் பகிர்ந்தால், இந்த 49-P விதிமுறை குறித்தான சட்ட விளக்கங்கள் மக்களிடம்  சென்று சேரும் என்ற நோக்கில் இதை எழுதுகிறேன்.

ஒருவரின் ஓட்டை மற்றொருவர் போட்டுவிட்டால், அது குறித்தான வழக்கு நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது தீர்ப்பு எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப்  பதிவு,நிகழ்வு உதவியாக இருக்கும்.

ஆண்டு 2008. ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல். அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வெற்றி பெற்றால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புப் பெற்றவருமான சி.பி.ஜோஷியும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கல்யாண்சிங் சவுகானும் ”நாத்துவாரா” சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள். 04-12-2008 அன்று தேர்தல் நடந்தது. 4 நாட்கள் கடந்து தேர்தல் முடிவுகள் வெளியானது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது “நாத்துவாரா” தொகுதியின் முடிவு காங்கிரசிற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது..!! இந்திய தேர்தல் வரலாற்றில் இது முக்கியமானதொரு முடிவாக இருக்கப்போகிறது என்பது அப்போது போட்டியிட்ட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தத் தேர்தலில்,  “நாத்துவாரா” தொகுதியில்
காங்கிரசின் ஜோஷி பெற்ற ஓட்டுக்கள்: ”62215”
பி.ஜே.பி.யின் கல்யாண் சிங் பெற்ற ஓட்டுக்கள்: ”62216”

ஆம், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பி.ஜே.பி.வேட்பாளரான கல்யாண் சிங் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்கச் சொல்கிறார் ஜோஷி.   தபால் வாக்குகளை எண்ணிப் பார்த்தாயிற்று, ஓட்டு எந்திரங்களில் மீண்டும் ஒருமுறை வாக்குகளை சரிபார்த்தாயிற்று. ஒரு ஓட்டு வித்தியாசம்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. 

 மாநில காங்கிரஸ் தலைவர், முதல்வராவதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர் என்ற முறையில் இருக்கும் காங்கிரசின் ஜோஷி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது உறுதி செய்யப்பட்டு, 08-12-2008 அன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ( 1980,1985,1998,2003 என ஏற்கனவே இந்த சட்டமன்றத் தொகுதியில் வென்றவர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த உண்மைச் சம்பவத்தில் 49(P) எனப்படும் பிரிவு இப்போது விவாதத்திற்கு வருகிறது.  Section 49P in The Conduct of Elections Rules, 1961 ன்படி தனது ஓட்டை யாராவது போட்டிருந்தால், தனது அடையாளத்தைக் நிரூபித்து, ஓட்டிற்குச் சொந்தக்காரரான உண்மையான நபர் வாக்களிக்கலாம். அப்படி சிலர், “நாத்துவாரா” தொகுதியில் வாக்களித்திருந்தனர். இப்படிப் போடப்பட்ட ஓட்டுக்களை “Tendered Votes" என்று அழைக்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், அவருக்கு அடுத்தபடியாக வந்த 
வாக்காளருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ள 
சமயத்தில் மட்டுமே, அதுவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் 
அடிப்படையில்தான் இவ்வாக்குகள் எண்ணப்படும். ஆகவே, தோற்றவராக 
அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி, இந்த Tendered Votes(49-P)
 எண்ணப்படவேண்டும் என்று கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில்
(ஜோத்பூர்) 16-01-2009ல் வழக்கு தொடுக்கிறார். (இது எண்ணப்பட்டால் தனக்கு 
சாதகமாக தீர்ப்பு மாற வாய்ப்பிருக்கும் என்று கருதி..). 
இவ்வழக்கில்(Election Petition No. 1/2009) 
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு, வென்றவராக அறிவிக்கப்பட்ட
 பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண் சிங்கின் மனைவி கல்பனா குன்வர் 
இரண்டு ஓட்டுக்கள்(வாக்குச்சாவடி எண்39,40ல் வரிசை எண் 484,727) போட்டார்
என்ற அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டையும் வழக்கில் சேர்த்திருந்தார். 
 
வழக்கம்போல், ஆண்டுக்கணக்கில்  விவாதிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி. தினேஷ் மகேஷ்வரி அவர்கள் 31-08-2012ல் தீர்ப்பு வழங்கினார். 

ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் 4 முக்கிய அம்சங்கள்:
1. “நாத்துவாரா” தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளர் கல்யாண் சிங்கின் வெற்றி செல்லாது, ரத்து செய்யப்படுகிறது (void) 

2. கள்ள ஓட்டு போட்ட பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கல்பனா குன்வர் மற்றும் வேறு இருவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்(கல்பனா போட்ட 2 ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல்,  வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது.) 

3. கள்ள ஓட்டு போட்டு தேர்தல் முறைகேடு செய்த பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங்,   காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் வழக்கு செலவிற்காக ரூ.51,000/- கொடுக்க வேண்டும்
.
4. பி.ஜே.பி. வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக இத்தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

எதிர்பார்த்தது போல் பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 49(P) விதிமுறையின்படி வாக்களித்தவர்களின் (”Tendered Votes" )எண்ணப்படவேண்டும் என்று கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அந்த வாக்குகளை எண்ண 04-03-2013ல் உத்தரவிட்டது.  

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி போட்ட 2 ஓட்டுக்களும் கள்ள ஓட்டாக கருதப்பட்டு, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதேபோல் வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டையும் கழித்துவிட்டு - 49(P) ல் பதிவான வாக்குகளை எண்ணி முடித்தபோது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. !

பி.ஜே.பி., காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றிருந்தனர் !! மீண்டும் குழப்பம் !!

இருவரும் சமவாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில்தான் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படவேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி சார்பில் வாதிடப்பட்டது. 

12-4-2013ல் இவ்விசித்திரமான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.(தேர்தல் நடந்தது டிசம்பர் 2008 என்பதை நினைவில் கொள்க!!). 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக்காலமே முடிவடையும் தருவாயில் உள்ளநிலை, மற்றும் ஜோஷி-கல்யாண்சிங் இருவருமே சம வாக்குகள் பெற்றுள்ள நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு “நாத்துவாரா” தொகுதியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண்சிங்கே சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவித்தது.

ஆக,  2008ல் தேர்தல். 2009ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு. 2012ல் உயர்நீதிமன்ற தீர்ப்பு. 2013ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு. ( இறுதித் தீர்ப்பு வெளியானது ஏப்ரல் 2013ல்தான். அதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆம், அக்டோபர் 2013ல் அடுத்த சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.)

கள்ள ஓட்டுப் போடப்பட்டால், அதுவும் “ஒரு ஓட்டு” வித்தியாசத்தில் வெற்றி,தோல்வி மாறும் என்ற இயல்புடைய வழக்கு ஒன்றில், தேசியக் கட்சி ஒன்றின் முதல்வர் வேட்பாளர் ஒருவர் தோற்ற வழக்கில் எவ்வளவு ”விரைவாக!!” தீர்ப்பு வரும் என்பதற்கு நம் கண்முன்னுள்ள உதாரணம் இது.  

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கள்ள ஓட்டு போட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவரின் ஓட்டைக் கழித்துவிட்டு மறு எண்ணிக்கை நடத்தவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. “நாத்துவாரா” தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்துவிடவில்லை..!!

காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்று, முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் என்பதைப் பார்த்தோம்(பின்னர் அவர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியானது வேறு கதை).  

இந்த சமயத்தில் ஒருவர், ஒரே ஒருவர், தேர்தல் நாளன்று  வாக்குச் சாவடிக்கு வந்திருந்தால் காங்கிரசின் ஜோஷி வெற்றி பெற்றிருப்பார்.

அவர் யார் தெரியுமா..? அவர் வேறு யாருமில்லை, வாக்களிக்க வராத ஜோஷியின் மனைவியே !! ?? 

Follow Us:
Download App:
  • android
  • ios