மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யுவகிருஷ்ணா தனது முகநூல் பதிவில் ஜெ.அன்பழகனை பற்றி பகிர்ந்துள்ள பதிவு இது.

’’2011 தேர்தலில் மாநிலம் முழுக்கவே திமுகவுக்கு தோல்வி முகம்தான். குறிப்பாக திமுகவின் கோட்டையான சென்னை சுக்குநூறானது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே கூட சூரியனின் உதயம் சென்னையில் மட்டும் தடுக்கப்பட முடியாததாக இருந்தது. 2011ல் 16 தொகுதிகளில் திமுக கூட்டணி இரண்டே இரண்டு தொகுதிகளில்தான் வென்றது. ஒன்று, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின். துணை முதல்வராக, திமுகவின் பொருளாளராக தேர்தலைச் சந்தித்த அவரது வெற்றியொன்றும் வியப்புக்குரியது அல்ல.

சென்னையில் பேராசிரியர், பரிதி இளம்வழுதி, என்.ஆர்.தனபாலன், திமுக இளைஞரணி துணைப்பொதுச்செயலராக இருந்த ஹசன் முகம்மது ஜின்னா, காங். மூத்தத் தலைவர் கே.வி.தங்கபாலு என்று வலுவான திமுக கூட்டணி வேட்பாளர்களே தோல்வி முகம் கண்டனர். ஆனால், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெ.அன்பழகன் பெற்ற வெற்றிதான் அனைவரையும் புருவம் உயர்த்தவைத்தது. இஸ்லாமியர் கோட்டையில், அச்சமூக மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்ற அதிமுக கூட்டணியின் தமிமுன் அன்சாரியை வென்றார்.

அரசியல் நோக்கர்கள் பலரும் அன்பழகனின் வெற்றி ரகசியத்தை ஆராய்ந்து தோற்றுப் போனார்கள். காரணம், அவர்கள் எவருமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மிகவும் எளிய ஒரு சூத்திரத்தை அன்பழகன் பயன்படுத்தி இருந்தார். திமுக ஆட்சிக்கட்டில் ஏறிய 2006 தேர்தலிலேயே கூட சென்னையின் பாதி இடங்களை அதிமுக கைப்பற்றி இருந்தது. பாரம்பரியமான வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களித்திருந்தும்கூட, முதன்முறை வாக்காளர்களான இளைஞர்கள் அதிமுகவை ஆதரித்திருந்தார்கள். தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட அன்பழகனும் இந்த இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

அதை மனதில் வைத்தே 2006ல் தொடங்கி இளைஞர்களைக் கவரக்கூடிய விஷயங்களை திமுக மா.செ.வாக செயல்படுத்தத் தொடங்கினார். அவர் எடுத்த சிறு - ஆனால் வீரியமான - ஆயுதம் கிரிக்கெட்.

சென்னை நகரமெங்கும் கலைஞர் கோப்பை, தளபதி கோப்பை என்று தொடர்ச்சியாக பெரும் பொருட்செலவில் ஃப்ளட்லைட் கிரிக்கெட் போட்டிகளை நடத்தினார். சைதாப்பேட்டை மாதிரி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அவர் நடத்திய போட்டிகள் ஐபிஎல்லுக்கு இணையாக cheer girls எல்லாம் வைத்து, அட்டகாசமான தமிழ் கமெண்ட்ரியோடு (வேறு யார் கழகப் பேச்சாளர்கள்தான்) பிரம்மாண்டமாக நடந்தன. துணை முதல்வரே பங்கேற்று கோப்பையை வழங்குமளவுக்கு இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு சென்னை திமுக முக்கியத்துவம் தந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் ஐநூறு, ஆயிரம் என்று அணிகள் கலந்துக் கொள்ளும். அவர்களுக்கு டீஷர்ட், பேட், பால் என்று பரிசளித்துக் குதூகலப்படுத்துவர் அன்பழகன்.

இப்போட்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவருக்கு நேரிடையாகப் பழக்கம் ஆனார்கள். அவர்களை கழகத்துக்கும் அழைத்து வந்தார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் ‘நம்ம அண்ணன்’என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பம்பரமாக சுழன்று பணியாற்றினார்கள் இந்த இளைஞர்கள்.

மிகச்சிறிய விஷயங்களில் நாம் செலுத்தக்கூடிய கவனம் கூட பின்னாளில் அரசியலில் பெரிய விஷயங்களுக்கு பயன்படும் என்பதை புரிந்துக்கொண்ட strategist ஜெ.அன்பழகன். மேடைகளில் பேசும்போது கொஞ்சம் கொச்சைமொழியில்தான் பேசுவார். ஆனால், சொல்ல வரும் விஷயத்தை நச்சென்று புரியவைப்பார். அலங்காரமாக மேடையில் அமருவதைவிட, கீழே தொண்டர்களை விரட்டி விழா ஏற்பாடுகளை செய்வதுதான் அவருக்குப் பிடித்தமான விஷயம்.

எனினும், பொதுவாகவே அவர் சிரிப்பது அரிது. தொண்டர்கள் அவரை செல்லமாக சிடுமூஞ்சி மா.செ என்பார்கள். வாக்காளர்களை நோக்கி கைக்கூப்பும்போது மட்டும் சிக்கனமாக சிரிப்பார். களத்தில் இறங்கி கடினமாகப் பணியாற்றக்கூடிய பல திமுக முன்னோடிகளிடமும் இந்த சிடுமூஞ்சித் தன்மை உண்டு. பணிப்பளு அவர்களுக்கு அத்தகைய பண்பை ஏற்படுத்தி விடுகிறது. சிரித்து விட்டால் அதட்டி வேலை வாங்க முடியாது என்பதுதான் காரணமோ என்னவோ?

காரணம் எதுவாக இருந்தாலும் மக்கள் சிரித்த முகங்களுக்கே கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கிறார்கள். எனவேதான் அதிமுகவில் ஊர் பேர் தெரியாதவர்கள் கூட அசால்ட்டாக எம்.எல்.ஏ ஆகிறார்கள். அடுத்தத் தலைமுறை திமுகவினராவது கொஞ்சம் ஜோவியலாக ஜோக்கடித்துப் பழக வேண்டும்.

எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்திருக்கிறார் அன்பழகன். அவர் எழுந்தாலே சபாநாயகர்கள் பதறுவார்கள். எப்போதுமே சஸ்பெண்ட் லிஸ்ட்டில் நிச்சயம் இவர் பெயர் இருக்கும் என்கிற அளவுக்கு சண்டைக்காரர். அதே நேரம் தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளுக்காக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தனிப்பட்ட முறையில் அணுகி சாமர்த்தியமாக செயல்படுவார்.

2001, 2011, 2016 என்று எம்.எல்.ஏ.வாக அன்பழகன் வென்ற மூன்று தேர்தல்களிலுமே தி.மு.கழகம் ஆட்சிக்கட்டில் ஏறவில்லை. 2021ல் திமுக ஆட்சி உறுதி என்கிற நிலையில் வருங்கால அமைச்சர் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிற காலத்தில் இயற்கை அவருக்கு அத்தகைய வாய்ப்பை வழங்க வகை செய்யவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.