திருச்சியை சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், திருச்சி எம்.பி. குமாருக்கும் இடையில் ஏகப்பட்ட பனிப்போர். இருவரும் ஒருவரையொருவர் உரசிக் கொண்டிருப்பது தொடர் கதையாகி இருக்கிறது. இந்நிலையில் குமார் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று அமைச்சரின் கைகளில் சிக்கிவிட, அதை அவர் முதல்வரிடம் போட்டுக் கொடுக்க, நகம் கடித்தபடி உட்கார்ந்திருக்கிறார் எம்.பி.
அதென்ன வீடியோ?...

கடந்த 12-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றிருக்கிறார் அமைச்சர். அதே விமானத்தில் அரக்கோணம் எம்.பி. ஹரியும், தினகரன் அணியின் வி.ஐ.பி.யான செந்தில் பாலாஜியும் பயணித்திருக்கின்றனர். 

அப்போது ஹரியை வரவேற்பதற்காக விமான நிலையம் வந்த குமார்,  இறங்கி வந்த அமைச்சரை கண்டுகொள்ளாமல் தாண்டி சென்றுவிட்டார். இதில் அமைச்சர் ஏக டென்ஷனாம். இந்த நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த அந்த இரு எம்.பி.க்களும் அங்கிருந்த வி.ஐ.பி. அறை பகுதிக்குள் போக, செந்தில் பாலாஜியும் அங்கேயே சென்றிருக்கிறார். இதை அமைச்சரின் ஆதரவாளர்கள் கவனித்துவிட்டு அவரிடம் சொல்லியிருக்கின்றனர். குஷியான வெல்லமண்டி அந்த வீடியோ ஃபுட்டேஜ்களை விமானநிலைய நிர்வாகத்திடம் இருந்து வாங்கி, அப்படியே முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் இருவரின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். 

அமைச்சரின் ஆதரவாளர்களும், ‘குமார் வகையா வீடியோவுல சிக்கிட்டார். வாழ்க்கை கொடுத்த கட்சிக்கு துரோகம் இழைச்சதுக்காக கூடிய சீக்கிரமே எம்.பி. பதவியும், மாநகர் மாவட்ட செயலாளர் பதவியும் அவர்ட்ட இருந்து பறிக்கப்படும். தினகரன் கோஷ்டி செந்தில்பாலாஜி கூட ஏர்போர்ட் டாய்லெட்ல ரகசிய கூட்டம் போட்டால், எங்களுக்கு தெரியாம போயிடுமா? இப்போ அமைச்சர் வெச்சார்ல ஆப்பு!’ என்று ஒரு தகவலை திருச்சியில் படரவிட்டு பாலிடிக்ஸ் செய்தனர். 

இதனால் கடும் கடுப்பிலிருக்கும் குமாரிடம் விசாரித்தபோது “அன்னைக்கு ஏர்போர்ட்டுக்குள்ளே நானும் ஹரி எம்.பி.யும் பார்த்து பேசினோம். அவரு டாய்லெட்டுக்கு போனதாலே நான் அங்கேயிருந்த வி.ஐ.பி. ரூம்  இருக்கையில் உட்கார்ந்து வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்போ செந்தில் பாலாஜியும் அதே டாய்லெட்டுக்கு போனார். ஆனா நானும், ஹரியும் செந்தில்பாலாஜிட்ட பேசிக்கலை. இதுதான் உண்மை. 

ஆனால் இதை யாரோ தப்பு தப்பாக அமைச்சர்ட்ட போட்டுக் கொடுக்க, அவரும் கஷ்டப்பட்டு சி.சி.டி.வி. பதிவுகளை வாங்கி சி.எம். வரைக்கும் புகாராய் கொண்டு போயிட்டார். இதைத்தெரிஞ்சுகிட்டு நானும் முதல்வரிடம் விளக்கம் தெரிவித்துவிட்டேன்.” என்று பதிலளித்திருக்கிறார். 

ஆனாலும் திருச்சி அரசியலை சூறாவளியாகத்தான் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது இந்த வீடியோ விவகாரம். 
இந்நிலையில், அமைச்சர் நடராஜனுக்காக ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு கடிதம் எழுதி அந்த சி.சி.டி.வி. காட்சிகளை வாங்கிக் கொடுத்ததே திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணிதானாம். இப்போது அவரும் எம்.பி. குமாரின் கோப பார்வைக்கு ஆளாகியுள்ளார். கூடவே ஏர்போர்ட் இயக்குநர் குணசேகரன் மீதும் குமார் கோபம் காட்டுவதால், அவர் பதற்றத்தில் இருக்கிறாராம். 

கஜா பரபரப்புக்கு இடையில் ஒட்டுமொத்தமாக சுழன்றடிக்கும் இந்த பரபரப்புக்கு இடையில் ஒரு குரூப் இந்த விவகாரத்தில் வேறு ஒரு கோணத்தைப் பற்ற வைக்கிறது..”அதாவது, ஒரு வேளை எடப்பாடியார் மற்றும் பன்னீர் இருவரும் இணைந்து எம்.பி.க்கள் குமார் மற்றும் ஹரி மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், இருவரும் அடுத்த நிமிடமே தங்களை தினகரனின் ஆதரவாளர்களாக அறிவித்துவிடுவார்கள்.” என்பதுதான்.