தெலுங்கானா மாநிலம், ஜன்கோன் மாவட்டம் கான்பூர் பகுதி  எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாடிகொண்டா ராஜையா.  இவர் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.  சமீபத்தில் அரசு  பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒய்வு பெறும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ தாடிகொண்டாவிற்கு மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டிவிட்டார்.

 

நாற்காலியில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏவுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டிவிட, அவருக்கு அருகில் மாணவர் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய எம்.எல்.ஏ தாடிகொண்டா, மாணவர்களின் அழைப்பின் பெயரில் தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறியுள்ளார். மேலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அந்த மாணவி, தாமாக முன்வந்து சாப்பாட்டை ஊட்டி விட்டார். அவரை எனது மகளாக நினைத்து ஊட்டியதை ஏற்றுக் கொண்டதாக கூறிய அவர், இது தெரியாமல் பலரும் என்னை விமர்சனம் செய்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.