என்னை தவிர்ப்பதற்கான எல்லா வேலைகளும் நடந்தது. கண்டிப்பாக உங்கள் மருந்தை முன்னெடுத்து செல்வோம் என்று கூறியவர்கள், நோயாளிகள் வந்தால் நீங்கள் சிகிச்சை கொடுத்து கொள்ளுங்கள் ஆனால்  இதை நிரூபிப்பதற்கான எந்த முயற்சியிலும் இறங்காதீர்கள் என்று என்னை கேட்டுக்கொண்டனர். அதாவது அறிவியல் பூர்வமாக இதை நிரூபிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த தனக்கு பாரத ரத்னா விருது தருவதாக மத்திய அரசு கூறியது, ஆனால் அடுத்த சில தினங்களில் தான் கைது செய்யப்பட்டு தன் மீது போலி மருத்துவர் முத்திரை குத்தப்பட்டது என சிறையிலிருந்து விடுதலையாகி வந்துள்ளது சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கூறியுள்ளார். ஆனால் பல மத்திய அமைச்சர்கள் தனது வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள்தான் என்றும், மத்திய, முன்னாள் முதலமைச்சர்களிடம் விருதுகள் வாங்கிய தனக்குதான் தற்போது போலி வைத்தியர் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளிகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா என்ற வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலையின் போது ஒட்டுமொத்த உலகமும் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் குறித்து அஞ்சி நடுங்கின, தனது பிரியத்துக்குரியவர்களை இந்த வைரசுக்கு பலிகொடுத்து திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் எழும்பியது. இப்படிப்பட்ட நிலையில் தான் விஞ்ஞானிகள் இந்த வைரசுக்கு எதிரான மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தனர். இது ஒருபுறமிருக்க பல சித்த மருத்துவர்கள் இதற்கு பாரம்பரிய மருத்துவமுறைகள் உள்ளது என கூறி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கினர். அந்த வகையில்தான் தமிழகத்தில் பிரபல சித்த மருத்துவராக அறியப்பட்ட திருத்தணிகாசலம் என்ற சித்த மருத்துவர் கொரோனா வைரசுக்கு தான் மருத்து கண்டுபிடித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

தனது மருந்தை உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான பல பகிரத முயற்சிகளில் அவர் ஈடுபட்டுவந்தார். அதேநேரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை தனது மருந்தை நாடுமுழுவதும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அவர் அன்றாடம் வீடியோ வெளியீடு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக பலமுறை மத்திய அமைச்சர் மற்றும் ஆயிஷ் துறை அதிகாரிகளையும் சந்தித்ததாகவும் அவர் கூறினார். அதற்கிடையில் கொரோனா மருந்து கண்டுபிடித்து விட்டதாக யாராவது போலியாக தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி கொரோனா வைரசுக்கு தன்னிடம் மருந்து உள்ளதாகவும் தனக்கு 100 நோயாளிகளை கொடுத்தால் 5 நாட்களில் குணமாக்கி காட்டுவதாகவும் சவால் விடுத்தார். 

பல கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அரசாங்கங்கள் தன்னை புறக்கணிக்கிறது என்றும், தான் சொல்லும் மருந்தை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டார். அவரின் அந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது. தன்னை சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முறையாவது சந்திக்க அனுமதிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். ஏன் தணிகாசலத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் தமிழக அரசு சந்திக்க மறுக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது அப்போதைய தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரம் பதிவோ இல்லாதவர்தான் தணிகாச்சலம் என்று அவரது உண்மை நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தணிகாசலத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது எழுந்த அடுக்கடுக்கான புகார்களை அடுத்து ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது. இந்நிலையில் கொரோனா மருந்து தொடர்பாக தன் மத்திய அரசின் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்தது தொடர்பாக மற்றும் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 25 ஆண்டுகளாக மருத்துவராக முறையாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தேன். சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இரண்டரை ஆண்டுகள் மூலிகை சார்ந்த விஷயங்கள் குறித்து எனது 400 டாகுமெண்டரிகளாக ஒளிபரப்பாகி இருக்கிறது. அதேபோல் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்து சேனல்களிலும் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகி இருக்கிறது. பல மத்திய அமைச்சர்கள் என்னிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இந்நாள் முன்னாள் மத்திய அமைச்சர்களும் என்னிடம் பேஷன்ட் ஆக இருந்திருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் நான் நல்ல வைத்தியராகதான் அவர்களுக்கு தெரிந்தேன். ஆனால் இப்போதுதான் போலி வைத்தியர் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறேன். கொரோனா என்ற நோய் பரவிய பின்னர் இந்த நோய் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன், இந்த நோய் குறித்த முழுமையான தகவல்கள் எனக்கு கிடைத்தது, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 2020 ஜனவரி 26 தேதி முதல் முதலாக நான் செய்தியாளர்களை சந்தித்தேன். இந்த நோய் வந்தால் என்ன செய்யும், இது என்னென்ன மாதிரியான பாதிப்பு அலைகளை ஏற்படுத்தும், எத்தனை சதவீதம் பேர் சிகிச்சை எடுக்க வேண்டும், எத்தனை சதவீதம் பேர் இந்த நோய் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினேன், உலகம் முழுவதும் 90% பேர் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் 90 சதவீதம் பேர் சிகிச்சையே எடுக்கத் தேவையில்லை என முதன் முதலில் கூறியது நான்தான். அப்போதே இந்த நோய்க்கான தீர்வுகளையும் நான் கூறினேன். அதனுடன் இந்த நோய் தொடர்பாகவும், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் மத்திய அரசுக்கும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் அறிக்கை கொடுத்தேன்.

அதற்கிடையில் பல வெளிநாடுகளில் இருந்து வைரசால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு நான் வழங்கிய சிகிச்சை குறித்தும், அவர்கள் குணமடைந்தது குறித்தும் நான் அறிக்கையாக வழங்கினேன். இந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் நான்கு முறை என்னை சந்தித்தார். நான் மதுரையில் இருந்த போது உடனடியாக என்னை டெல்லிக்கு வரவேண்டும் என அழைத்தார். நான் டெல்லிக்கு சென்றேன், என்னுடைய மருந்து விவரங்களை எல்லாம் கூறும்படி கேட்டார்கள். நான் விவரங்களைக் கூறினேன், அந்த விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு எனக்கு அந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது கொடுப்பதாக கூறினார். இந்த ஆண்டு பாரத ரத்னா விருது உங்களுக்குத்தான் என என்னிடம் அவர் அடித்துக் கூறினார். அதன் பிறகு பிரதமர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன், அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்தேன், அங்கிருந்தவர்கள் என்னுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பிறகு பிரதமரை சந்திக்க எனக்காக ஏற்பாடு செய்தனர். ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் திடீரென சூழல் மாறிவிட்டது.

பிறகு என்னை தவிர்ப்பதற்கான எல்லா வேலைகளும் நடந்தது. கண்டிப்பாக உங்கள் மருந்தை முன்னெடுத்து செல்வோம் என்று கூறியவர்கள், நோயாளிகள் வந்தால் நீங்கள் சிகிச்சை கொடுத்து கொள்ளுங்கள் ஆனால் இதை நிரூபிப்பதற்கான எந்த முயற்சியிலும் இறங்காதீர்கள் என்று என்னை கேட்டுக்கொண்டனர். அதாவது அறிவியல் பூர்வமாக இதை நிரூபிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் எச்சரித்தனர். பிறகு அங்கிருந்து அதிகாரிகள் ஸ்கைப்பில் உங்களை தொடர்பு கொள்கிறோம் என கூறிவிட்டு, நான் கொடுத்த அறிக்கைகளை எல்லாம் வாங்கிக்கொண்டு என்னை அனுப்பி வைத்து விட்டனர். பிறகு அனிமல் டெஸ்ட் செய்துவிட்டு வாருங்கள் என கூறி என்னை அனுப்பி வைத்துவிட்டனர் . நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு மருந்து கொடுத்து அவர்களை குணமாக்கிய பிறகும் அனிமல் டெஸ்ட் எடுத்து வாருங்கள் என்று என்னை புறக்கணித்து விட்டார்கள். இந்த நிலைமையில்தான் நான் கைது செய்யப்பட்டு என் மீது போலி மருத்துவர் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.