பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, விரைவில் சென்னை சிறைக்கு மாற்றம் செய்யப்படுவார் என, அதிமுக பிரமுகர் பெங்களூர் புகழேந்தி கூறினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 15ம், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வருகிறார்கள். சிறையில் உள்ள சசிகலாவை, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சந்தித்து வந்தனர்.

இந்த வேளையில், சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதற்காக ரூ.2 கோடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. மேலும், அவர் கடைக்கு சென்று திரும்புவது போன்ற காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபோன்ற சம்பவமே நடக்கவில்லை. இதை எதிரிகள் சிலர், சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என கூறினார். இதை தொடர்ந்து இன்று, சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி.தினகரன் பெங்களூர் சென்றுள்ளார்.

இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை, சென்னை சிறைக்கு மாற்றம் செய்ய கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு தமிழக சிறைத்துறை அதிகாரி, கர்நாடக சிறைத்துறை அதிகாரி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அதிமுக பிரதிநிதி புகழேந்தி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியின் போது கூறியதாவது.

“சிறை உள்ள சாதாரண கைதிக்கு கூட, உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உரிமை உண்டு. சிறைச்சாலை வளாகத்தில், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு அதிகாரிகள், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர்.

அப்படி இருக்கும்போது, ஒரு கட்சியின் பொது செயலாளராக உள்ள சசிகலாவை அக்கட்சியினர் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதேபோல், அவர் ஒரு கட்சியின் பெரிய பொறுப்பில் உள்ளார்.

அதனால், அவருக்கு சிறை உடையை அணிய விருப்பம் இல்லை என்றால், மாற்று உடையில் இருக்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தவறாக சித்தரித்து, சிலர் ஆதாயத்தை தேடுகின்றனர். 

இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க, விரைவில் சசிகலா சென்னை சிறைக்கு மாற்றம் செய்யப்படுவார். அதற்கான வேலைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.