மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் இதுவரை 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தொடங்கி வீட்டு வேலைக்காரர்கள் வரை யாரையுமே விடாமல் இந்த விசாரணை நடந்தது.

அதேபோல ஜெயலலிதாவின் தோழி சசிகலா உறவினர்களிடமும் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சசிகலா சிறையில் இருப்பதால் ஆணையத்தில் அவரால் நேரில் ஆஜராக வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக பிரமாண பத்திரம்தான் சசிகலா தாக்கல் செய்திருந்தார். அந்த பத்திரத்தில், யார் யாரெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது உட்பட பல தகவல்களை சொல்லி இருந்தார். 

அதுமட்டுமல்லாமல்  அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த  வித்யாசாகர்ராவ், ஓபிஎஸ், தம்பிதுரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவர்கள் எல்லாரும் எந்தெந்த தேதிகளில் சந்தித்து விட்டு போனார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்களில் பெரும்பாலானவை தவறாக உள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது. ஜெயலலிதாவுக்கு 20 டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாக சசிகலா சொன்ன தகவலும் தவறாக உள்ளது என்று ஆணையம் அன்றே கூறியிருந்தது. இந்நிலையில், சசிகலா அன்று அளித்த தகவலின்படியே, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், துணை சபாநாயகர் தம்பிதுரை என ஒட்டுமொத்தமாக ஒரு விசாரணை நடத்தலாமா என்று ஆணையம் ஆலோசித்து வருகிறது. 

இந்நிலையில் வரும்  10-ம் தேதிக்குள்  விசாரணையை முடித்துவிட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனால் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதனால் கண்டிப்பாக சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவது உறுதியாகி உள்ளது. 

ஏற்கனவே வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தலாம் என சொல்லப்பட்ட நிலையில்  ஜெயிலுக்குள் அதற்கான வசதி இல்லாததால்  அது முடியாமல் போனதால், தற்போது பரோலில் சசிகலா சென்னை வரவழைக்கப்படுவாரா? அல்லது ஆறுமுகசாமி ஆணையத்தில் உள்ள அதிகாரிகளே ஜெயிலுக்குள் போய் விசாரணையை ஆரம்பிப்பார்களா என்பதுதான் தெரியவில்லை.

ஆனால் சசிலாவிடம் விசாரணை நடத்து வேண்டும் என்பது மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவர் நடராஜன் இறந்தபோது பரோலில் வந்திருந்த சசிகலா ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது பரோலில் வெளியில்  வர இருக்கிறார்.