சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தனது இரண்டு ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார். அவர் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலையாக அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வருகிற 15-ந்தேதியுடன் அவர்களது சிறை வாழ்க்கை 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை சிறையில் கழித்து விட்டால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என்கிற விதி உள்ளது.

சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது. இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளது. சசிகலா 2017-ம் ஆண்டு சிறைக்கு சென்றார். 4 ஆண்டு தண்டனைப்படி அவர் 2021-ம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும்.

ஆனால், நன்னடத்தை அடிப்படையில் அவரை 1 ஆண்டுக்கு முன்பு விடுவிக்கலாம். எனவே அடுத்த ஆண்டு சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.