சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுக்கப்பட்டது. அதில், தற்போதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதில்ர ஒரு அணி சசிகலா தலைமையில் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் டி.டி.வி தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இதற்கிடையில், அதிமுகவில் பிரிந்த அணிகள் மீண்டும் இணைவதாக பேசப்பட்டது. ஆனால், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சசிகலாவும், தினகரனும் சிறையில் இருந்தபோது அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் கட்சிப்பணிகளில் ஈடுபட தொடங்கினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் ஓரம் கட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் அதிமுகவின் ஆட்சியும், கட்சியும் செயல்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.
கட்சியின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுக்கப்பட்டது. அதில், தற்போதுவரை எவ்வித மாற்றமும் இல்லை.
அதிமுகவின் இரு அணிகளை இணைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. எங்கள் தரப்பில் எந்த தடையும் இல்லை. ஒரு சிலர் உடன்படாமல் பிரிந்து சென்றாலும் அதிமுகவை இணைப்பதற்கான முயற்சிகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.