ஜெயலலிதா எனும் அதிகார மையத்தின் நிழலாக இருந்தவர் சசிகலா. சசி மற்றும் அவரது குடும்பத்தினரின் அதிகார ஆட்டங்களாக தமிழகத்தில் வர்ணிக்கப்பட்ட விஷயங்கள் ஏராளம் ஏராளம். குறிப்பாக தங்களுக்கு பிடித்தமான சொத்துக்கள் தமிழகத்தில் எங்கே இருந்தாலும் அதன் ஓனரை மிரட்டி, உருட்டி, பணியவைத்து தரைமாட்டு விலையில் அபகரித்துக் கொள்வார்கள் என்பது மிக முக்கிய குற்றச்சாட்டு. கோடநாடு எஸ்டேட்டில் துவங்கி பல சொத்துக்களை இந்த பட்டியலில் சேர்க்கிறார்கள் விமர்சகர்கள். அதேபோல் சசி டீமின் அதிகார அடாவடித்தனத்தால் சொத்து விஷயத்தில் பாதிக்கப்பட்ட வி.ஐ.பி.க்கள் அதிகம்! கங்கை அமரன் பி.ஜே.பி.யில் சேர்ந்ததெல்லாம் இவர்களின் டார்ச்சரின் விளைவே! என்பார்கள். 

இப்படி பூதாகரமாக வர்ணிக்கப்பட்ட சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பின், பரப்பன அக்ரஹரா சிறையில் அடைபட்ட பின், அ.தி.மு.க.விலிருந்து கட்டங்கட்டப்பட்ட பின், கணவர் நடராசன் மறைந்த பின் பெரிய அளவில் மனமாற்றம் அடைந்திருக்கிறார் என்கிறார்கள். 
அதற்கான உதாரணமாக கீழே உள்ள நிகழ்வு சுட்டிக்காட்டப்படுகிறது...

அதாவது கணவர் நடராசன் இறப்புக்காக பத்து நாடக்ள் பரோல் பெற்றிருந்த சசிகலா அது முடிவதற்குள் நேற்றே சிறை திரும்பிவிட்டார். அவரது காருக்கு முன்னதாகவும், பின்னதாகவும் கொத்துக்கொத்தான கார்கள் அணிவகுத்து செல்ல பெங்களூரு திரும்பினார். 

ஓமலூர் அருகே நரிப்பள்ளம் எனுமிடத்தில் சுமார் இரண்டு மணியளவில் ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்த சொன்னார் சசி. பின் பங்கில் இருந்த ஊழியர்களிடம் ‘இங்கே காரை நிறுத்தி சாப்பிட்டுக்கலாமா?ன்னு பர்மிஷன் கேளுங்க’ என்று சசி சொல்ல, தினகரன் சிலரை அனுப்பி கேட்க, அனுமதியும் கிடைத்திருக்கிறது. அதன் பின் அரை மணி நேரம் சசி டீமின் கார்கள் அங்கே நிறுத்தப்பட்டன. சசியும், தினகரனும் காரில் அமர்ந்தபடியே சாப்பிட்டனர். பிறகு பங்கில் இருந்தவர்களுக்கு தேங்ஸ்! சொல்லிவிட்டு சிறை நோக்கி நகர்ந்திருக்கிறது கான்வாய். 

இந்த சம்பவத்தை ஆச்சரியமாக பார்க்கும் அரசியல் விமர்சகர்கள் “சசிட்டதான் எவ்வளவு மாற்றம்! ஒரு காலத்துல அந்த பெட்ரோல் பங்க் தனக்கு பிடிச்சிருக்கு, குறைஞ்ச ரேட்டா எவ்வளவு சொல்லுவாங்க, வாங்கிடுன்னு சொல்ற டீமா இருந்தவங்க இப்போ சாப்பிடுறதுக்கு அரைமணி நேரம் நிறுத்திக்கலாமா!?ன்னு கேட்டு பம்மியிருக்காங்க. இதுதான்யா வாழ்க்கை. ஒரு நொடியில தலைகீழா மாறிடும் சூழ்நிலை. இன்னைக்கு பதவியில இருக்கிறவங்க இதை புரிஞ்சுக்குறது நல்லது.” என்கின்றனர். 

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சசி ஆசைப்பட்டு காரை நிறுத்த சொன்ன அந்த பெட்ரோல் பங்கின் பெயர் ‘ஜே.ஜே.பெட்ரோல் பங்க்’. இதுல ஏதும் உள்குத்து இருக்குமோ?!