மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தினகரனின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அதேபோல முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையவுள்ளார். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச்  சந்தித்து அதிமுகவில் மீண்டும் செயலாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படி அமமுகவுக்கு அடி மேல் அடி விழுந்து வரும் நிலையில்,  இன்று  பெங்களூரு சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசினார். 

அப்போது கட்சியைப் பதிவு செய்வது குறித்து விவாதித்தவர், புதிய நிர்வாகிகள் பட்டியலை காட்டி ஒப்புதல் பெற்றிருக்கிறார். மேலும் நிர்வாகிகள் விலகிவருவது குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தினகரனிடம் நிர்வாகிகள் விலகல் குறித்து சசிகலா என்ன சொன்னார் என்று எழுப்பிய கேள்விக்கு,  ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் இருந்துள்ளேன்…அவரோட ஏற்ற இறக்கங்களைப் பாத்துள்ளேன்.. நிர்வாகிகள் விலகல் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல என அவர்  கூறியதாக தெரிவித்தார்.