சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து வெளியில் வாங்க..அப்புறம் முதலமைச்சராகுங்கள்… சசிகலாவுக்கு சசிகலா புஷ்பா சவால்…

அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனையடுத்து சசிகலா இன்றோ அல்லது 9 ஆம் தேதியோ சசிகலா முதலமைச்சராக பதவியேற்ப உள்ளார். அதற்கு வசதியாக முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்றே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சசிகலா முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்வதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக ஆளுநர வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு சசிகலா புஷ்பா எழுதியுள்ள கடிதத்தில் ,தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்க அழைப்பு விடுப்பது மற்றும் நியமிக்க முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிவுடன் சசிகலாவும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் முதலமைச்சராக தகுதியில்லாதவர் என்றும் அவ்வழக்கில் இருந்து வெளியேறிய பின்னர் முதலமைச்சராகட்டும் என்றும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

சசிகலா அடிப்படையில் எந்தவிதமான கட்சிப் பணிகளை செய்தது கிடையாது என்றும் குற்றம்சாட்டியுள்ள சசிகலா புஷ்பா, ஜெயலலிலதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலாவை ஏன் அவர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்றால்,.சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் இதன் காரணமாக சசிகலாவை முதலமைச்சராக பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டாம் என்றும் பிரதமர் மற்றும் ஆளுநரை சசிகலா புஷ்பா கேட்டு கொண்டுள்ளார்.