அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., தன்னை சுயேட்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா எம்.பி.யின் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதால் தன்னை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி தாவல் தடை சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை  உச்சநிதிமன்ற  நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மோகன் எம்.சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் சசிகலா புஷ்பா தரப்பில் வக்கீல் பி.ராமசாமி ஆஜரானார்.

சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக கட்சித்தலைமையிடம் இருந்து ஏதேனும் கடிதம் வந்துள்ளதா என்றும் ராஜ்யசபா செயலாளரிடம் இருந்து ஏதேனும் கடிதம் வந்துள்ளதா என்றும் அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுவரை அது போன்ற கடிதம் வரவில்லை என்று சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் இதில் மனுதாரர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும் தற்போது உள்ள நிலையே தொடரலாம் என்றும் கூறி வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.