அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி அக்டோபர் 16 அன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எனவே, அதிமுக பொன்விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா தெரிவித்திருந்தார். ஆனால், தேர்தல் நேரத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், தேர்தலில் அதிமுக தோல்விக்குப் பிறகு சசிகலாவிடம் மன மாற்றம் ஏற்பட்டது. அதிமுக தொண்டர்களுடன் அவர் தொலைபேசியில் பேசிய பேச்சுகள் தொடர்ந்து வெளியே வந்தன. எனவே, மீண்டும் தீவிர அரசியலில் சசிகலா ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொன்விழா நடைபெறும் அக்டோபர் 17-ஆம் தேதிக்கு முன்பாக 16-ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளார்.
மேலும் அக்டோபர் 17 அன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் தமிழகம் முழுவதும் சசிகலா தீவிர சுற்றுப்பயணம் செய்யவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.