sasikala niece mahadevan died
அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். தஞ்சாவூரில் வசித்து வந்தார். ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும் இருந்து வந்தார்.
இன்று காலை மகாதேவன், குடும்பத்துடன் திருவிடை மருதூர் கோயிலுக்கு காரில் புறப்பட்டார். கார் சென்று கொண்டு இருந்தபோது, மகாதேவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தார்.
உடனே குடும்பத்தினர், அவரை கும்பக்கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

ஜெயலலிதா பேரவையில் சில காலங்கள் மட்டும் இருந்த அவர், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை அறிந்து வைத்து இருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, ராஜாஜி அரங்கில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் இளவரசி, நடராஜன், சுதாகரன், தினகரன், திவாகரன் ஆகியோருடன் மகாதேவன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாதேவன் மறைந்த சம்பவம் பற்றி பரப்பன அக்ராஹரம் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தகவல் சென்றது. அதை கேட்டதும் அவர், அதிர்ந்து சில நிமிடங்கள் சிலை போல் நின்றுவிட்டாராம். பிறகு அவரை, இளவரசி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
