நாடாளுமன்றத்தில் நாட்டின் 3வது மிகப் பெரிய கட்சியாக விளங்கும் அதிமுகவுக்கு புதிய தலைமை யார் என்ற கேள்வியே கடந்த 20 நாட்களாக தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள பெரும்பாலோனோரின் மனதில் எழும் விஷயமாகும்.

எப்படியும் சசிகலா தான் கட்சியை வழி நடத்துவார் என்பது உள்விவரம் தெரிந்த அனைவரும் அறிந்ததுதான். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. சசிகலாவுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் என சொல்லப்பட்ட பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் கூட ஒட்டு மொத்தமாக சரணடைந்துவிட்டனர்.

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா புஷ்பா குரல் கொடுத்தாலும், அவரால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என சொல்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். நாளை மிகுந்த எதிர்பார்ப்புடன், சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தின் இறுதியில் சின்னம்மா சசிகலா, ஒரு மனதாக கட்சியின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி.
இதற்காக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்களிடம் கொடுக்கப்பட்ட அசைமென்ட்டுகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டுவிட்டதாம். அதிருப்தியில் இருநத சின்ன சின்ன நிர்வாகிகள் கூட, சரிகட்டப்பட்டுவிட்டனர். சின்னம்மா சசிகலாவை, அட்ஜஸ்ட் செய்து கொண்டு, யார் முந்தியடித்து கொண்டு முன்னேறி முன்னால் வருகிறார்களோ, அவர்களுக்குதான் வசதியும், வாய்ப்பும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த வாய்ப்பை பக்கா அரசியல்வாதிகள் யாரும் நழுவ விடமாட்டார்கள். ஏனென்றால், அரசியலுக்கு வருவதே மக்கள் சேவை, புகழை கடந்து பணம் என்ற முக்கிய விஷயம் அடிப்படையாக உள்ளது. அதற்கு ஆளுங்கட்சியின் அணுசரணை, ஆள்வோரின் அணுசரணை கட்டாயம் தேவை என்பதை அனைவரும் உணர்ந்து இருக்கின்றனர்.
எனவே, சின்னம்மா சசிகலாவை எதிர்க்க, நிர்வாகிகளில் ஆளே இல்லாததால், நாளை அவர் பொது செயலாளராக தேர்ந்தொடுக்கப்பட்டு கிரீடம் சூடுப்படுகிறார். அதுமட்டுமின்றி, விரைவில் ஆட்சி பொறுப்பையும் கையில் எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.

இதன் முன்னோட்டமாக தான், அதிமுக மவுத்பீஸ் எனப்படும் ஜெயா டிவியில் தொடர்ந்து, சின்னம்மா அவர்கள், பொது செயலாளராகவும், முதலமைச்சராகவும், பதவியேற்க வேண்டும் என்று அவரை, சந்தித்தவர்கள் வேண்டி கேட்டு கொண்டார்கள் என தொடர்ந்து செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது.
இதன் மூலம், முதலமைச்சராக பதவியேற்கவும் சசிகலா தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது. கூடிய விரைவில் தமிழகத்துக்கு மீண்டும் ஒரு பெண் முதலமைச்சரை எதிர் பார்க்கலாம். நிர்வாகிகள் மட்டத்தில் 100 சதவீதம் ஆதரவு பெற்றிருந்தாலும், ஆர்கே நகர் தெடங்கி கன்னியாகுமரி வரை அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பே காணப்படுகிறது.

ஜெயலலிதா மறைநது 20 நாட்கள் ஆன பின்னரும், உணர்ச்சி பொங்க தொண்டர்கள், சசிகலாவை எதிர்த்து பேசுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒட்டு மொத்த நிர்வாகிகளையும சரிகட்டிய அதிமுக தலைமை, தொண்டர்களின் எதிர்ப்பை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது கேள்வி குறி. பொறுத்திருந்து பார்க்கலாம்.
