திருச்செந்தூர் வந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நேரில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியை நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சசிகலா நேற்று தென்மாவட்ட கோயில்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று பிற்பகல் திருச்செந்தூர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவரை ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா மற்றும் சில நிர்வாகிகள் திடீரென சந்தித்து பேசினர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த சசிகலா சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார். 

இதையடுத்து அவரை மீண்டும் சந்திப்பதற்காக ஓ.ராஜாவும் அங்கேயே தங்கினார். கோயிலின் நுழை வாயிலில் உள்ள சண்முகவிலாஸ் மண்டபம் முன்பு சசிகலாவிற்கு திரிசுதந்திரர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. தொடர்ந்து அவருக்கு பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் கோயிலுக்கு சென்று அங்குள்ள பெருமாள் சன்னதி, மூலவர் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். 

தொடர்ந்து திருச்செந்தூரிலுள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கியிருந்து இன்று காலை வாகனம் மூலம் நெல்லைக்கு செல்ல இருக்கிறார்.அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டுமென்ற குரல் வலுத்து வரும் நிலையில் ஓபிஎஸ் தம்பி அவரை சந்தித்தது கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருவண்ணா மலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, ‘அதிமுவின் உட்கட்சி பிரச்சனைகளில் கருத்து சொல்ல விரும்பவில்லை. தேனியில் அதிமுகவினர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்து கேள்விப்பட்டேன். அதிமுகவின் நிர்வாகிகள் பலரும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

எதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் போகிறது என்று தெரியவில்லை. அதிமுகவில் தற்போது சுய பரிசோதனை தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக அதிமுக ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்த பிறகுதான், அதிமுகவில் இணைவது குறித்து கருத்து சொல்ல முடியும்’ என்றார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்களும், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆன குமாரபாளையம் தங்கமணி, பவானி கருப்பண்ணன் சேலத்தில் சந்திப்பு நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த அவசர ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் அரியணை ஏறும் சசிகலாவுக்கு ஆதரவாக மாறுமா? அல்லது புதிய தர்ம யுத்தம் தொடங்கப்படுமா? அல்லது அதிமுகவுக்குள் பிளவு ஏற்படுமா? என்பது போக போகத்தான் தெரியும்.