பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு விதிகளை மீறி 5 அறைகள் ஒதுக்கீடு மற்றும் தனி சமையல் உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது கர்நாடக அரசின் உயர்மட்ட விசாரணையில் உறுதியாகி உள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக கடந்த ஆண்டு சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார்.

 

இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணைக்கு அப்போதைய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு கர்நாடக அரசிடம் அளித்த அறிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்தது உண்மையே என கூறப்பட்டுள்ளது. 5 அறைகளில் ஒன்று சசிகலாவிற்காக சமையல் செய்யப்பட்டதையும், இதற்காக அங்கு குக்கர் மற்றும் சமையலறை சாதனங்கள் இருந்ததையும் உயர்மட்டக்குழு உறுதிப்பட்டுத்தியுள்ளது. 

உயர் மட்டக்குழு நேரில் ஆய்வு செய்த போது அங்கிருந்த அனைத்து பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டாலும் மாடம் ஒன்றில் சமையலுக்காக மஞ்சள் தூள் படிந்திருந்தது கண்டறியப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் 100 பெண் கைதிகளை அடைக்க 28 அறைகள் இருக்கும் நிலையில் 5 அறைகள் சசிகலாவிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எஞ்சிய கைதிகள் 23 அறைகளில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சசிகலா மற்றும் இளவரசி சாதாரண உடையில் கையில் பையுடன் நடமாடும் வீடியோ பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த போது பார்வையாளர்களை சந்திக்க சென்றதாக அவர்கள் கூறினாலும், சிசிடிவி கேமரா பதிவு நேரங்கள் ஒத்துபோகவில்லை என்று உயர்மட்டக்குழு கூறியுள்ளது.

 

இதனால் அவர்கள் வெளியில் சென்று வந்திருக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் சொந்த உடை அணிய சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அக்குழு, இதுபோன்று பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.