கடந்த 1987ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலமானார். அதன் பிறகு, நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்டார். அதில் திமுக வெற்றி பெற்றது. பின்னர், 1990ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை அடைந்தார்.

அந்த நாள் முதல் நேற்று வரை ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீடு எஃகு கோட்டையாக இருந்து வந்தது. ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதால், போயஸ் கார்டன் பகுதி முழுவதும் 24 மணிநேரம் முழு பாதுகாப்புடனும், தீவிர கண்காணிப்புடனும் இருந்து வந்தது.

அதே வேளையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அங்கேயே இருந்தார். இந்த பாதுகாப்பு அவருக்கும் கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, அரண்மனையை போல் வர்ணிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அதன்பிறகு, போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா தங்கினார். அப்போதும், அந்த வீடு ஒரு பிரமாண்ட மாளிகையாகவே இருந்தது. கடந்த 1990 முதல் நேற்று வரை 3 முதல் 5 அடுக்கு பாதுகாப்பு இருந்தது.

என்ன செய்ய வேண்டுமானாலும், கை தட்டினால் வேலையாட்கள் வருவார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும் சசிகலாவு ராஜ உபசிரிப்பு இருந்தது. தேவையான உணவு, விரும்பிய சாப்பாடு என சகல வசதிகளும் இருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானது. அதில், 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சசிகலா நேற்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் சரணடைந்து, அங்குள்ள பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு சென்றார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு சிறப்பு பிரிவு வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு சாதாரண அறை ஒதுக்கப்பட்டது. போயஸ் கார்டன் வீட்டில் ராஜ உபசரிப்புடன் இருந்த சசிகலாவுக்கு இன்று காலை சுமார் 6.30 மணிக்கு புளியோதரையும், கருப்பட்டியும் கொடுக்கப்பட்டது. பட்டு மெத்தையில் படுத்து உறங்கிய அவருக்கு, தரையில் படுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஃகு கோட்டையை போல இருந்த, பாதுகாக்கப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தற்போது வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் கூட இப்போது, இல்லை. அந்த பகுதி முழுவதும் சோகமயம் ஆனது போல் உள்ளது.

இதற்கிடையில், மதுரையை சேர்ந்த உயர் அதிகாரியின் தம்பி ஒருவர், பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலையில் வேலை பார்க்கிறார். அவர் மூலம், ஒரு வாரத்தில் சென்னைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.