பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, தனி அலுவலகம் நடத்தி வந்ததாக, டிஐஜி ரூபா பகிரங்கமாக தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 15ம், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வருகிறார்கள். சிறையில் உள்ள சசிகலாவை, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சந்தித்து வந்தனர்.

இந்த வேளையில், சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதற்காக ரூ.2 கோடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. மேலும், அவர் கடைக்கு சென்று திரும்புவது போன்ற காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிறைச்சாலையில் ஆய்வு செய்த டிஐஜி ரூபா, படங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். அதில், சில வீடியோ காட்சிகளும் இருந்தன.

இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு குழு அமைத்து, உரிய விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமய்யா உத்தரவிட்டார். இதற்கிடையில் டிஐஜி ரூபா, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிஐஜி ரூபா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் பகுதியில் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்றில் கூட சசிகலா, தன்னை பார்க்க வந்தவர்களை சந்தித்த காட்சி பதிவாகவில்லை.

சிறைச்சாலைக்கு உள்ளே, பயன்பாட்டுக்கு இல்லாத ஒரு அறையை சசிகலாவுக்கு அலுவலகமாக அமைத்து கொடுத்துள்ளனர். அங்கு மேஜையுடன் கூடிய சுழலும் நாற்காலி அமைக்கப்பட்டு இருந்தது. அதே அறையில் சில இருக்கைகள் இருந்தன.

சிறையில் உள்ள சசிகலா, தன்னை சந்திக்க வருபவர்களை, தனி அறையில் வைத்து சந்தித்தார். அங்கு அவருக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு சசிகலாவுக்கு தேவையான துணிகள், தனி சமையல் அறை, சொந்தமாக ஒரு மெத்தை உள்பட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதெல்லாம் செய்வது சரியானதா. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமா...? வேண்டாமா...? மருத்துவர் பரிந்துரை இல்லாமல், அவருக்கு தனி அறை, மெத்தை, அலுவலகம் ஆகியவை அமைத்து கொடுக்க யார் உத்தரவிட்டது. இது அனைத்தும் சிறை விதிமீறல்கள்.

எனக்கும் சசிகலாவுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. நான், என் கடமையைதான் செய்தேன். அதில் என்ன தவறு. சிறை விதிமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன். என் பணியை செய்வதற்காக நான் தயங்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.