Sasikala feeling about her previous life in jain
அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட சசிகலா, தமது சொந்த வாழ்க்கையில் அனைத்து சுக-துக்கங்களையும் இழந்த சோகத்தில் நெஞ்சம் கனக்க கண்ணீர் வடித்து வருகிறார்.
பெங்களூரு சிறையில், ஆரம்பத்தில், சசிகலா எதற்கும் கலங்காமல் இருந்தாலும், கடைசி காலத்தில் கூட தமது கணவருடன் வாழ முடிய வில்லையே, என்ற ஆதங்கம் அவரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்னால், அவர் ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்யும் வரை, அவரை ஒரு தைரியமான பெண்மணியாகத்தான் தெரிந்தார்.
ஜெயலலிதா இருந்தவரை, அவருக்கு கிடைத்த ஒரு சில சிறப்பு அந்தஸ்தை தவிர, அனைத்து மரியாதைகளும், சசிகலாவுக்கும் கிடைத்தன. ஆளும் வர்க்கம் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை அவர் முன்னே கைகட்டி நின்றனர்.

ஆனால், அண்மைக்கால நிகழ்வுகள் அவரை, ரொம்பவே கலங்க வைத்துள்ளது. அதனால் சில நேரங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுது விடுவதாகவே சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா இருந்தவரை, சசிகலாவை ஒரு நிழல் முதல்வராகவே பார்த்த, அதிகாரிகள், அமைச்சர்கள், அத்துடன் அவர்கள் போட்ட கும்பிடு, காட்டிய பணிவு என அனைத்துமே போலி என்பதை அவர் தற்போது தெளிவாக உணர்ந்து விட்டார்.
சசிகலாவே முதல்வராக வேண்டும், அவர் இருக்கும் இடத்தில் நான் செருப்பு கூட அணிய மாட்டேன் என்று, நடிகர் திலகத்தை விட கூடுதலாக நடித்த அமைச்சர் உதயகுமார், விசுவாசத்தின் அடையாளம் பன்னீரே என்று அப்படியே டைவ் அடிக்கிறார்.

சின்னம்மா இல்லை, எங்கம்மா என்று கண்கள் சிவக்க குரல் கொடுத்த அமைச்சர் சி.வி.சண்முகம், அவர்கள் குடும்பத்தையே அரசியலை விட்டு ஒதுக்கி விட்டோம் என்று பேட்டி கொடுக்கிறார்.
சசிகலா முதல்வர் ஆவதற்கு முன்பே, அவரை மாண்புமிகு சின்னம்மா என்று அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தவர்கள், தலைமை கழகத்தில் இருந்த அவரது பேனர்களை எல்லாம், பிய்த்து எரிய உத்தரவு போடுகின்றனர்.
இதை எல்லாம் கேள்விப்பட்டு, கட்டுப்படுத்த முடியாத துக்கத்தால், கண்ணீர் விட்டு வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் சசிகலா. மற்றவர்கள் காட்டிய பணிவு, பவ்யம், விசுவாசம் எல்லாமே நடிப்புதான் என்று தற்போது அவர் தெளிவாக உணர்ந்து விட்டார்.
அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு குடும்ப தலைவியாக இருந்து செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்யாமல் இருந்து விட்டோமே? என்ற கவலையே அவரை அதிகமாக வாட்டி வதைக்கிறது.
கடைசி காலத்திலாவது கணவர் நடராஜனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்துள்ளது. கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது, அருகில் இருந்து செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் இருக்கிறோமே என்று அவர் மிகவும் வேதனை பட்டுள்ளார்.
கணவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. பிள்ளைகளும் பிறக்கவில்லை. அதற்கான மருத்துவமும் செய்துகொள்ள முடியாமல் போய் விட்டது.
இப்படி, சொந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து, கடைசி காலத்தில் சிறையில் தவிக்கிறேன். எனக்கு எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? என்று சசிகலா மிகவும் கலங்குகிறார்.
அரசியல் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டு பார்த்தால், அவரவர் இதயத்தில் ஆயிரம், ஆயிரம் ஆசைகள் இருக்கத்தானே செய்யும். அது சசிகலாவுக்கும் இருக்கும் அல்லவா? அவரும் பெண்தானே?
