அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் இதுகுறித்து நடைபெற உள்ள ஆலோசனைக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அதிமுக மீதும் இரட்டை இலை சின்னம் மீதும் உரிமை கோரி வழக்கு தொடுக்கப்பட்டதால் அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை மக்களவை தேர்தலுக்கும் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

அப்போது பதிவு செய்யப்படாத கட்சியாக இருப்பதால் அமமுக கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். ஆகையால் அவர்களுக்கு தனித்தனி சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டியது. ஆனாலும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததால் அமமுகவுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களே கருதப்பட்டனர். 

இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாளே அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார். அத்தோடு துணைப்பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கி விட்டு துணைப்பொதுச்செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் அமமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார்.