Sasikala brother Divakaran openly reovlt against Dinakaran
அரசியல் ஜனநாயகத்துக்கு ஜெயலலிதா வைத்திருந்த அகராதியே தனி. அவரது ஆட்சியில் எதிர்கட்சிகளின் மீது அவர் காட்டும் அழுத்தம் தனித்துவமான சென்சிடீவ் தன்மையுடையது என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜனரஞ்சகமாக சொல்வதென்றால்...அதிகாரத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையில் உழலும் மிக மெல்லிய கோடுதான் அது என்று அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஜெ., ஆட்சியில் எந்த ஒரு பிரச்னையையும் எதிர்த்து அவ்வளவு எளிதில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்திட முடியாது. பொதுக்கூட்ட மைதானத்தில் ஆரம்பித்து, மைக் செட் பார்ட்டி வரைக்கும் போலீஸின் கண்பார்வையில் முடக்கப்பட்டு ‘அனுமதி இல்லை’ என்று ஒரு போர்டை மாட்டிவிடுவார்கள். தி.மு.க., கம்யூனிஸ்டில் ஆரம்பித்து இந்த சுளுக்கில் சிக்காத எதிர்கட்சிகளே கிடையாது.
இப்படி எதிர்கட்சிகளின் ஜனநாயக குரலுக்கு செக் வைத்த அ.தி.மு.க.வின் ஒரு அணியே மற்றொறு அணியால் இப்படியான சிக்கலில் சிக்கிக் கொண்டிருப்பதுதான் விதியின் விளையாட்டு.

தினகரனுக்கு ஆதரவாக தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி இருவரும் தமிழகமெங்கும் தினகரனுக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தினகரன் திகாரில் இருக்கும் போது ‘பொய்வழக்கில் அண்ணனை உள்ளே தள்ளிவிட்டனர்!’ என்று மத்திய அரசை கண்டித்து அழுகாச்சி கூட்டம் போட்டவர்கள், அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்ட நிலையில் ‘அண்ணனால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்ட துரோகிகள் இன்று அண்ணனை எதிர்த்தே அரசியல் செய்கிறார்கள்.’ என்று மாநில அரசை கண்டித்து ஆவேச கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கூட்டம் போட்ட நாசா மற்றும் பெங்களூரார் டீம் சமீபத்தில் கடந்த ஞாயிறன்று மன்னார்குடியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டது.
தினகரனின் போக்கு பிடிபடாமல் அவருக்கு செக் வைக்க தனது தம்பி திவாகரனை கட்சிப் பணிகளில் தலை நீட்டும் படி சசிகலா களமிறக்கியிருக்கும் நிலையில் மன்னார்குடியிலேயே நாசா அண்கோ தினகரன் துதிபாடும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில் செம்ம காண்டாகிவிட்டார் திவா. சிம்பிளாக எடப்பாடி அண்ட்கோவின் காதுகளுக்கு இதை கொண்டு சென்று ’மன்னார்குடியில் நடக்கும் இந்த கூட்டம் உங்களை விமர்சிக்க மட்டுமில்லை எங்கள் குடும்பத்திலுள்ள சிலரையும் மறைமுகமாக விமர்சிக்கத்தான். துரோகிகள், போட்டியாளர்கள், திரைமறைவில் குழிபறிக்கிறார்கள்...என்றெல்லாம் தினகரனின் கைத்தடிகள் சாபமிடப்போவது உங்களை மட்டுமல்ல எங்களையும் சேர்த்துத்தான். எனவே உடனே இந்த கூட்டத்தை தடை செய்யுங்கள்!’ என்று பொங்கியிருக்கிறார்.
.jpg)
திவாவுக்கும், பழனிக்கும் வேவ்லெந்த் மிக சரியாவே ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே திவாவின் கோரிக்கையை உடனே ஏற்ற முதல்வர் காவல்துறைக்கு கண்சிமிட்ட, அடுத்த நொடியில் இந்த கூட்டம் நடத்தப்பட கூடாது என்று எடப்பாடி அணியை சேர்ந்த மன்னார்குடி நிர்வாகி ஒருவர் புகார் கொடுத்தார். இதையே அடிப்படையாக வைத்து தினகரன் அணி பொதுக்கூட்டத்துக்கு ‘அனுமதி இல்லை’ எனும் போர்டை மாட்டி ஊத்தி மூடிவிட்டது போலீஸ்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாசா, பெங்களூரார் உள்ளிட்டோர் மன்னார்குடி நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் வந்து தங்கியிருந்தனராம். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ‘உங்களுக்கெல்லாம் இங்க ஒரு வேலையுமில்ல. ஊரப்பார்த்து கிளம்புங்க.’ என்று போலீஸ் தஞ்சையை நோக்கி கிளப்பிவிட்டதாம். இதில் நாஞ்சில் சம்பத்துக்கு செம டென்ஷன். ’உங்கள் துறையின் எத்தனை அதிகாரிகள் அண்ணன் தினகரனிடம் ப்ரமோஷனுக்காகவும், இடமாறுதலுக்காகவும் வந்து நின்று காரியம் சாதித்துள்ளார்கள் தெரியுமா? அந்த நன்றி சிறிதுமில்லையா!” என்று கண்களை சுருக்கி, தாடையை விரித்து, வாயை குவித்து கேட்க, காதிலேயே வாங்கிக் கொள்ளாத போலீஸ் காரியத்திலேயே குறியாக இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டது.

மன்னார்குடியில் மட்டுமில்லை தமிழகத்தில் இனி எங்கு கூட்டம் போட திட்டமிட்டாலும் இப்படியான இடைஞ்சல் தங்களுக்கு வந்து சேரும் போல என்று மண்டை காய்ந்து நிற்கிறது தினகரன் அணி.
போற போக்கைப் பார்த்தால் பெங்களூர் புகழேந்தியின் ஏற்பாட்டில் பெங்களூருவில்தான் ஏரியாவுக்கு ஏரியா ச்சும்மா யூரியா அடிக்கிற மாதிரி தினகரன் அணி கூட்டம் நடத்தணும் போலிருக்குது. பரப்பன அக்ரஹார சிறையருகே கூட்டத்தை போட்டு நாஞ்சில் சம்பத்தை விட்டு சசி, திவாகரன் இருவரையும் இலைமறை காயாக கிழித்தெடுக்க வைத்தால் ஜெயிலுக்குள்ளிருக்கும் சசி கேட்டு பொங்கி எழுந்துடமாட்டாரா என்ன!
