ஒரே ரத்தம், உடன் பிறந்த தம்பி!... என்று எதையும் பாராமல் திவாகரனை, தினகரனுக்காக வெறுத்து ஒதுக்கி விரட்டினார் சசிகலா. ஜெயலலிதா வீட்டில் பல நாட்கள் சோறு உண்ட பந்தத்துக்காக, அ.தி.மு.க.வை காக்கும் பொறுட்டு திவாகரனும் புதிய கட்சி ஒன்றை பத்துக்கு பத்து ரூமில் ஓப்பன் செய்து புதிய புரட்சியை உருவாக்கினார். 

சுகர் மாத்திரையும் கையுமாக அலையும் சில நபர்களை வைத்துக் கொண்டு ‘என் கட்சி! என் படை!’ என்று சீன் போட்ட திவாகரன், கடைசி வரை காமெடி ஜானரிலேயே ஆடிவிட்டு ஓய்ந்துவிடுவார்! என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அதிரடி ஜானருக்கு தன் ஜாகையை மாற்றியிருக்கிறார் திவா! என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். 

என்ன நடக்கிறதாம்?... தனக்காக சசிகலாவை சந்திக்க ஆள் மேல் ஆள்விட்டு, ஒரு வழியாக தன் பேச்சுக்கு காது கொடுக்குமளவுக்கான நிலையை உருவாக்கிவிட்டாராம் திவாகரன். ’சரி அவன் சொல்லிவிட்டதை சொல்லிட்டுப் போ!’ என்று திவாகரனின் தூதுவரிடம் சசி கடுப்பாய் சொல்லியதும், பொத்தானை அமுக்கியதும் சுற்றும் காற்றாடி போல தினகரனைப் பற்றி புகாராய் பொழிந்து தள்ளுகிறதாம் தூது குழு. 

கடந்த சில மாதங்களில் மட்டும் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ அடைந்துள்ள இழப்புகள், சரிவுகள் பற்றி வரிசையாக பட்டியலிட்டிருக்கிறார்கள். ஹைலைட்டாக, ‘ஆர்.கே.நகர்ல தினகரன் ஜெயிச்ச அந்த ஒரு விஷயம் மட்டும்தான் அவரோட சாதனை. அதுக்கு அப்புறம் எதுவுமே வெளங்கல. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உறுதியானதுல துவங்கி இதோ செந்தில்பாலாஜி தாவல் வரை எல்லாமே  அவரோட நிர்வாக சறுக்கல்தான். எதுக்குமே அலட்டிக்க மாட்டேங்கிறார். அது அவருக்கு பிரஷர் வராம தடுக்கலாம், ஆனால் கட்சி காணாம போயிடும்மா. அ.ம.மு.க.ங்கிறது தினகரனோட ஆதரவாளர்களால் உருவான கட்சி இல்லை, அதில் இருக்கும் ஒவ்வொருத்தரும் உங்களோட தொண்டர்கள். 

அந்த கட்சி காணாமல் போனால் இழப்பு தினகரனுக்கு இல்லை, உங்களுக்குதாம்மா. உங்களுகு இருக்கும் தொண்டர் ஆதரவை பார்த்துதான் பழனிசாமியும், பன்னீர் செல்வமும் நடுங்குறாங்க. அதை இழந்துட்டா எல்லாமே கைவிட்டு போயிடும். ஆனா இப்போ வரைக்கும் உங்க மேலே அவங்க ரெண்டு பேருக்கும் மரியாதையும், பயமும் இருக்குது. பன்னீருக்கு கூட தினகரன் மேலேதான் கோபம், உங்க மேலே பெருசா இல்லை. எல்லாமே பேசியாச்சு, இதான் கடைசி சந்தர்ப்பம். அவங்க உங்க தலைமையில அ.ம.மு.க.வை அப்படியே இணைச்சுக்க தயாரா இருக்கிறாங்க. உங்களுக்கான மரியாதை, பதவி, பிரதிநிதித்துவம் எல்லாமே தானாக அடுத்தடுத்து வந்து கிடைக்கும். ஆனா ஒரே கண்டிஷன், நீங்க தினகரனை விலக்கி வெச்சுட்டு வரணும்! அவ்வளவுதான். 

அதே மாதிரி அவங்க சைடுல உங்களை விமர்சிச்சு பேசுற ஒரே வாயி அமைச்சர் ஜெயக்குமார் மட்டும்தான். அதுவும் வெற்றிவேல் மற்றும் தினகரன் மேலே இருக்கிற கடுப்புலதான் இப்படி பேசுறார். நீங்க தினகரனை விலக்கி வெச்சால், பதிலுக்கு அவங்க ஜெயக்குமாரை விரட்டிவிட கூட தயாரா இருக்கிறாங்க. யோசிங்க சின்னம்மா. இது கடைசி சந்தர்ப்பம். தினகரனால் கட்சி அழியும் முன் காப்பாத்துங்க.” என்று காலிலேயே விழுந்துவிட்டார்களாம். சசியின் தெளிவான பதில் விரைவில் திவாகரனை வந்து சேருமாம். சின்னமா ஆப்ஸன் என்னவா இருக்கும்?